மீன்வளத் துறை சார்பில் மீன் இறங்குதளங்கள் உட்பட ரூ.177 கோடியில் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

மீன்வளத் துறை சார்பில் மீன் இறங்குதளங்கள் உட்பட ரூ.177 கோடியில் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
Updated on
1 min read

சென்னை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், கோடிமுனை கிராமத்தில் ரூ.35 கோடியிலும், பள்ளம்துறை கிராமத்தில் ரூ.26 கோடியிலும், தூத்துக்குடி மாவட்டம், அமலி நகர் கிராமத்தில் ரூ.58 கோடியிலும் தூண்டில் வளைவுடன் மீன் இறங்குதளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல் திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியில் ரூ.26.85 கோடியில் நிரந்தரமாக முகத்துவாரம் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. சாத்தான்குளம் கிராமத்தில் ரூ.8 கோடியிலும், அரங்கன் குப்பம், கூனான்குப்பம் கிராமங்களில் ரூ. 6.81 கோடியிலும் கடலூர் மாவட்டம், சொத்திக்குப்பம் மற்றும் ராசாப்பேட்டை கிராமங்களில் ரூ.8.50 கோடியிலும் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல், கோமுகி அணையில் ரூ.5 கோடியில் புதிய அரசு மீன்விதைப் பண்ணை, சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மீன் விதைப் பண்ணையில் ரூ.3 கோடியில் ஒருங்கிணைந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.177.16 கோடியில் 9 முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்துவைத்தார்.

மேலும், டிஎன்பிஎஸ்சி மூலமாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்துக்காக தேர்வு செய்யப்பட்ட 89 பேர், கால்நடை பராமரிப்புத் துறைக்காக தேர்வு செய்யப்பட்ட 22 பேர் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் கருணை அடிப்படையில் 17 பேருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், மற்றும் துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in