

புதுடெல்லி: தனக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணையை ரத்து செய்யக்கோரி அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 1996- 2001 மற்றும் 2006 - 2011 திமுக ஆட்சிக் காலங்களில் தமிழக அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
அமைச்சர், அவரது மனைவி மற்றும் மகன் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், அவர்களை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.
மேலும், அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து ஆறு மாதங்களில் வழக்கின் மறுவிசாரணையை முடிக்க, கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக் ஷி அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கின் அனைத்து அம்சங்களையும் உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதிகள், மனுவை திரும்பப்பெற அனுமதியளித்து தள்ளுபடி செய்தனர்.