தடுப்பணை கட்டுவதாகச் சொல்லி பாலாற்றில் மணல் கடத்தல்! - அமைச்சருக்குப் பயந்து ஆக்‌ஷன் எடுக்காமல் இருக்கிறார்களா அதிகாரிகள்?

அமைச்சர் துரைமுருகன் மற்றும் குமார்.
அமைச்சர் துரைமுருகன் மற்றும் குமார்.
Updated on
2 min read

பாலாற்றில் இந்த ஆண்டு 3 தடுப்பணைகள் கட்டப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்திருந்த நிலையில், தடுப்பணை கட்டுவதாகச் சொல்லி அவருக்கு விசுவாசமானவர்கள் ஆற்றங்கரையிலேயே ரெடிமிக்ஸ் ஆலை அமைத்து மணலைக் கடத்துவதாக காட்பாடி மக்கள் கதறுகிறார்கள்.

அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமவளத் துறை கடந்த மே மாதம் ரகுபதி கைக்கு மாற்றப்பட்டது. இருந்த போதும் மணல் விவகாரங்களில் இன்னமும் துரைமுருகனின் கையே ஓங்கி இருப்பதாகச் சொல்கிறார்கள். இத்தனை நாளும் அவரது செல்வாக்கில் ‘வளம் கொழித்து’ வந்த மணல் புள்ளிகள் இன்னமும் அதிகார தோரணையில் வலம் வருவதாகவும் சொல்கிறார்கள். இதனால், மணல் விவகாரத்தில் இவர்கள் மீது புகார்கள் வந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகச் சொல்பவர்கள், துரைமுருகனின் சொந்தத் தொகுதியான காட்பாடியில் இந்தப் போக்கு உச்சத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

காட்பாடி தொகுதிக்குள் வரும் தண்டல கிருஷ்ணாபுரம் (டி.கே.புரம்), பாலாற்றை ஒட்டியுள்ள ஒரு கிராமம். இங்கு பாலாற்றின் மையப்பகுதியில் தடுப்பணை கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அமைச்சர் துரைமுருகனுக்கு வேண்டப்பட்ட பொதுப்பணித்துறை காண்ட்ராக்டர் குமார் என்பவருக்கே இந்தப் பணிகள் ஒதுக்கப்பட்டன. அமைச்சரின் மகள் சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் ஓட்டல் கட்டுமானங்களைக் கவனிக்கும் காண்ட்ராக்டரும் இவர் தான் என்கிறார்கள்.

தடுப்பணையைக் கட்டத் தொடங்கியபோது ரெடிமிக்ஸ் ஆலையும் பாலாற்றின் கரையோரம் அமைக்கப்பட்டது. தடுப்பணை கட்டுமானப் பணிகளுக்காகத்தான் இந்த ரெடிமிக்ஸ் ஆலை என ஆரம்பத்தில் கிராம மக்கள் அமைதியாக இருந்தனர். ஆனால், ஆற்றின் கரையோரம் ரெடிமிக்ஸ் ஆலையை போட்டுக்கொண்டு அங்கிருந்து மற்ற இடங்களில் நடக்கும் கட்டுமானப் பணிகளுக்கு சட்டவிரோதமாக மணலைக் கடத்திய விஷயம் பிறகு தான் தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்து, மணல் கடத்தலை தடுத்து நிறுத்தக் கோரி விருதம்பட்டு காவல் நிலையத்தில் கிராமத்தினர் புகார் அளித்தனர். ஆனால், ‘அனைத்தும் தெரியும்’ என்பதால் அந்தப் புகாரை ஒரு ஓரமாக வைத்துவிட்டது போலீஸ். இதையடுத்து, ஒரே பதிவெண் கொண்ட லாரிகள் மூலம் மணலைக் கடத்துவதை வீடியோ எடுத்த கிராமத்தினர் அதை சமூகவலைதளத்தில் வைரலாக்கினர். அதற்கு மேல் வேறு வழியில்லாததால், காண்ட்ராக்டர் குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீது கடந்த மாதம் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்தனர்.

வழக்குப் பதிவு செய்தாலும் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை போலீஸ். அதனால் பாலாற்றில் மணல் திருட்டு இன்னமும் தொடர்கிறது. சம்பந்தப்பட்ட அந்த ரெடிமிக்ஸ் ஆலையும் இன்னும் அப்புறப்படுத்தப்படாமல் இருக்கிறது. இதனிடையே, மணல் கடத்தலுக்காக பாலாற்றுக்குள் தோண்டப்பட்ட குழியில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி மூன்று பேர் பலியாகி இருக்கிறார்கள். அதன் பிறகும் இந்த அவலத்தைத் தடுக்க எந்த அதிகாரியும் பதறியோடி வந்ததாகத் தெரியவில்லை.

இது தொடர்பாக நாம் வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் வெங்கடேசனை தொடர்பு கொண்டபோது அவருக்குப் பதிலாகப் பேசிய அவரது அலுவலக உதவி மேலாளர் ராஜேந்திர பிரசாத், “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் ரெடிமிக்ஸ் ஆலை செயல்படும் இடங்களில் எங்கள் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். டி.கே.புரத்தில் ரெடிமிக்ஸ் ஆலை இயங்குகிறதா(!?) என்பது குறித்து உதவிப் பொறியாளர் சிந்தனைச்செல்வன் ஆய்வு நடத்தி வருகிறார்" என்றார்.

விருதம்பட்டு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆதர்ஷிடம் கேட்டபோது, “டி.கே.புரம் பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். அவர்களை கைது செய்வது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கேட்டுத் தான் நடவடிக்கை எடுக்க முடியும். அப்படி கைது செய்தால் நிச்சயம் நானே உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் அக்கறையுடன். இது தொடர்பாக காண்ட்ராக்டர் குமாரிடம் பேசுவதற்கு ஒன்றுக்கு பலமுறை முயன்றும் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

தடுப்பணை கட்டுவதாகச் சொல்லி ஆற்று மணலை சுரண்டி விற்றுக் காசு பார்க்கும் கும்பல் மீது அமைச்சருக்குப் பயந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக காட்பாடி மக்கள் ஆவேசப்படுகிறார்கள். மணல் கடத்தல் புள்ளிகள் தனது செல்வாக்கில் தப்பித்து வருவதை இன்னமும் அனுமதிக்கத்தான் போகிறாரா அமைச்சர் துரைமுருகன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in