ரூ.100 கோடி நஷ்ட ஈடு வழக்கு: தோனியிடம் வாக்குமூலம் பெற வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது ஐகோர்ட்!

ரூ.100 கோடி நஷ்ட ஈடு வழக்கு: தோனியிடம் வாக்குமூலம் பெற வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது ஐகோர்ட்!
Updated on
1 min read

சென்னை: 100 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்த வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎல் சூதாட்ட வழக்கு தொடர்பாக, தொலைக்காட்சி விவாதத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் கூறியதாக, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார், ஜீ மீடியா கார்ப்பரேஷன், இந்தி செய்தி தொலைக்காட்சியான நியூஸ் நேஷன் நெட்வொர்க் பிரைவேட் லிமிட்டெட் உள்ளிட்டோருக்கு எதிராக, நூறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, 2014-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தோனி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வழக்கில் சாட்சி விசாரணையை துவங்க வேண்டும். அதற்கு வாக்குமூலம் அளிக்க முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகக் கூறியுள்ளார்.

பிரபலமானவர் என்பதால், மாஸ்டர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க நேரில் ஆஜரானால், குழப்பங்கள் ஏற்படும் என்பதால், தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும். அக்டோபர் 20-ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 10-ஆம் தேதி இடையில், அனைத்து தரப்பினரின் வசதிக்கு ஏற்ப ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்தால், அங்கு வாக்குமூலம் அளிக்க தயார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை ஏற்று, தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்த நீதிபதி, உயர் நீதிமன்றத்தின் பட்டியலில் இருந்து வழக்கறிஞர் ஆணையரை தேர்வு செய்வதாக தெரிவித்தார். தோனி வாக்குமூலம் பதிவு முடிந்த பின், வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in