புதுச்சேரி ரெஸ்டோபார் மாணவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - நாராயணசாமி

புதுச்சேரி ரெஸ்டோபார் மாணவர் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் - நாராயணசாமி
Updated on
1 min read

புதுச்சேரி: "புதுச்சேரி ரெஸ்டோபாரில் மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடுவோம். போலீஸார் மீது நம்பிக்கை இல்லை" என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நாராயணசாமி இன்று கூறியதாவது: புதுச்சேரியில் கையூட்டாக ரூ. 40 லட்சம் பெற்றுக்கொண்டு அதிகளவில் ரெஸ்டோபார்கள் திறக்கப்பட்டதாக புகார் தெரிவித்தோம். ரெஸ்டோபாரால் ஏற்பட்ட கலாச்சார சீரழிவுக்கு என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசே காரணம்.

கோயில், சர்ச், மசூதி, பள்ளிகள் அருகே ரெஸ்டோபார்கள் பல கோடி லஞ்சம் தரப்பட்டு செயல்படுகின்றன. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. வார விடுமுறை நாட்களில் வீட்டிலிருந்து வெளியே வர மக்கள், பெண்கள் அஞ்சுகின்றனர். வெளிமாநிலத்திலிருந்து ரெஸ்டோபார் வருவோர் புதுச்சேரியின் அமைதியை கெடுக்கின்றனர். தமிழக கல்லூரி மாணவர் ரெஸ்டோபாரில் கொல்லப்பட்டுள்ளார். ரெஸ்டோபார் 12 மணிக்கு மூடாமல் ஞாயிறு அதிகாலை வரை செயல்பட்டுள்ளது.

அதிகாலை வரை செயல்பட போலீஸாரும், கலால்துறையும் எப்படி அனுமதி தந்தனர்? அதிகாலை வரை ரெஸ்டோபார்கள் திறப்பதற்கு போலீஸும் உடந்தை. அவர்கள் கையூட்டு பெறுவதும் ஒரு காரணம். போலீஸாரும் இக்குற்றத்துக்கு பொறுப்பு ஏற்கவேண்டும். கொலை நடந்த ரெஸ்டோபாரில் ஒரு உரிமையாளர் முதல்வருக்கு நெருக்கமானவர். அதனால் அதிகாலை நடந்த சம்பவத்துக்கு எப்ஐஆர் போட ஞாயிறு இரவு வரை காலதாமதம் செய்துள்ளனர்.

புகார்தாரர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் மிரட்டியுள்ளார். மேலும் இச்சம்பவத்தின்போது தொடக்கத்தில் இருந்தோரிடம் புகார் பெறாமல் தாமதமாக வந்தோரிடம் புகார் பெற்று எப்ஐஆர் பதிவாகியுள்ளது. கொலை சம்பவத்துக்கு பொறுப்பேற்று கலால்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ராஜினாமா செய்யவேண்டும். சட்டம் ஒழுங்கு சீரழிவால் உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், தனது வீட்டருகே அனுமதி அளித்ததற்கு அமைச்சர் லட்சுமி நாராயணனும் பொறுப்பு ஏற்கவேண்டும்.

கொலை நடந்த தெருவிலேயே மூன்று ரெஸ்டோபார்கள் கோயில், சர்ச், பள்ளி அருகேயுள்ளன. ஆட்சியாளர்களின் பினாமிகள் பலர்தான் ரெஸ்டோபார்கள் நடத்துகின்றனர். போலீஸார் இவ்வழக்கை சரியாக விசாரிக்கமாட்டார்கள். அவர்கள் மீது நம்பிக்கையில்லை. அதனால் சிபிஐ விசாரிக்கவேண்டும். அதனால் சென்னை உயர்நீதிமன்றம் சென்று விசாரணைக்காக மனு தாக்கல் செய்வோம்.

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கிராமப்பகுதிகளிலும் ரெஸ்டோபார் திறந்துள்ளதுதான் அவர் தொகுதி மக்களுக்கு செய்துள்ள சாதனை. பல கோடி ரூபாய் மதிப்பிலான கார்களை முதல்வர் ரங்கசாமி வாங்கியது எப்படி என்பதை தெரிவிக்கவேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கோயில், மசூதி, சர்ச், பள்ளி அருகேயுள்ள ரெஸ்டோபார் அனுமதிகளை ரத்து செய்வோம்” என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in