மவுலிவாக்கம் கட்டிட விபத்து: 540 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

மவுலிவாக்கம் கட்டிட விபத்து:  540 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
Updated on
1 min read

மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவினர் 540 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனர்.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் ‘பிரைம் சிருஷ்டி' என்ற நிறுவனம் கட்டி வந்த 11 மாடி கட்டிடம் ஜூலை 28-ம் தேதி இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் 61 பேர் பலியானார்கள். 27 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்துக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இந்நிலையில், கட்டிட விபத்து தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, ஒருநபர் ஆணையம் பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் கட்டிட வல்லுநர்களிடம் விசாரணை மேற்கொண்டது. மேலும், விசாரணை அறிக்கை தயார் செய்து முதல்வரிடம் ஒப்படைத்தது.

இந்நிலையில், மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தில், 540 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார், குற்றவியல் நீதிபதி சந்தோஷிடம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தனர். இதில் மரணத்தை விளைவித்தல் மற்றும் மோசடி செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 340 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கட்டிட உரிமையாளர் உட்பட 8 பேருக்கும் வரும் 3-ம் தேதி நீதிமன்ற காவல் முடிவடைவதால், அன்றைய தினம் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது அவர்களுக்கு குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in