தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஓர் இணை அரசாங்கத்தை நடத்துவதாக ஐகோர்ட் கண்டனம்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஓர் இணை அரசாங்கத்தை நடத்துவதாக ஐகோர்ட் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஓர் இணை அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

எழுத்தாளர்களுக்கான கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டை ரத்து செய்ததை எதிர்த்து கவிஞர் வைரமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதை அடுத்து, விசாரணையை பிற்பகல் 2:15 மணிக்கு தள்ளி வைத்தார்.

அப்போது வைரமுத்து தரப்பில் ஆஜராக இருந்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், ஏற்கெனவே பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்த வழக்கில், இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை பின் தேதியிட்டு அமல்படுத்துவதாக அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், அவருக்கு வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

இதைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ‘இது ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல். ஐஏஎஸ் அதிகாரிகள் இணையான ஓர் அரசாங்கத்தை நடத்தி வருகிறார்கள். இது துரதிஷ்டவசமானது” என கண்டனம் தெரிவித்தார்.

மேலும், “எழுத்தாளர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்தது என்பது உணர்வுபூர்வமான விஷயம். இது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தெரியாது. அவர்கள் அதிகார தொனியிலேயே செயல்படுவார்கள். கலைஞர் இதை ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும்” என்றும் நீதிபதி எச்சரித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in