Last Updated : 15 Jul, 2018 06:17 PM

 

Published : 15 Jul 2018 06:17 PM
Last Updated : 15 Jul 2018 06:17 PM

புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம்: பேரவையில் பாதுகாப்பு அதிகரிப்பு

 

புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பாஜக நியமன எம்எல்ஏக்கள் மூவரையும் பேரவையில் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ மனு தந்துள்ளார். இந்நிலையில் சபாநாயகர் திடீரென்று இன்று பேரவைச் செயலருடன் ஆலோசனை நடத்தினார். பேரவையைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் பரிந்துரையின்றி ஓராண்டுக்கு முன்பு மத்திய அரசு நியமனம் செய்த பாஜகவைச் சேர்ந்த 3 நிமயன எம்எல்ஏக்களை சபாநாயகர் வைத்திலிங்கம் இதுவரை எம்எல்ஏக்களாக அங்கீகரிக்கவில்லை. அதனால் நீதிமன்றத்தை நாடினர். நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 23-ம் தேதி உத்தரவிட்டது.

பேரவைக்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி நீதிமன்ற தீர்ப்பு நகலுடன் நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் சபாநாயகர் வைத்திலிங்கத்தைச் சந்தித்து மனு அளித்தனர். இருப்பினும், தன்னிடம் கருத்துகேட்காமல் வழங்கப்பட்ட தீர்ப்பை ஏற்க முடியாது என மார்ச் 25-ம் தேதி மறுத்து உத்தரவிட்டார். மார்ச் 26-ம் தேதி தொடங்கிய இடைக்கால நிதிநிலைக் கூட்டத்தொடரின்போது பேரவைக்குள் வர தடை விதித்து வைத்திலிங்கம் உத்தரவிட்டார். நியமன எம்எல்ஏக்கள் போராடியும் பேரவைக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பான மறுசீராய்வு மனுவை சபாநாயகர் வைத்திலிங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு இதுவரை நிலுவையில் உள்ளது. மேலும், இத்தீர்ப்பை எதிர்த்து முதல்வரின் நாடாளுமன்ற செயலரும் காங்கிரஸ் எம்எல்ஏவுமான லட்சுமிநாராயணன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்நிலையில் புதுவை பேரவையில் ஜூலை 2-ம் தேதி முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே இவ்வழக்கு கடந்த 13-ம் தேதி விசாரணைக்கு வந்த போது ஜூலை 19-ம் தேதி இறுதிக்கட்ட விசாரணைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

ஆளுநர் திடீர் கருத்து

96724909bedijpgjpgபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி100 

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நடவடிக்கை குறிப்பில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எவ்வித தடை ஆணையும் பிறப்பிக்கவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளதாகவும், எனவே, நியமன எம்எல்ஏக்கள் புதுவை பேரவைக்குள் சென்று இருக்கையில் அமரலாம் என்றும், யாராவது தடுத்தால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்றும் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இதுவரை இடைக்காலத் தடை ஆணை வழங்கப்படாததால் தங்களை பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று புதுவை பேரவை செயலர் வின்சென்ட் ராயரிடம் நியமன எம்எல்ஏக்கள் மனு அளித்தனர். யார் தடுத்தாலும் பேரவைக்குள் நுழைவோம் என்றும் அறிவித்துள்ளனர்.

காங்கிரஸ் எம்எல்ஏ மனு

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சபாநாயகர் வைத்திலிங்கத்துக்கு மனு அளித்துள்ளார். அதில் ''இடைக்கால தடையாணை ஏதும் நீதிபதிகள் தரவில்லை. மனு விசாரணை நிலுவையில் உள்ளது. வரும் 19-ம் தேதி மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. நிலுவையில் வழக்குகள் உள்ளதால் மூவரையும் பேரவைக்குள் அனுமதிப்பது தொடர்பாக சபாநாயகர் எவ்வித முடிவும் எடுக்கவேண்டாம். சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு இந்த நிலையே மேலும் தொடர வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆலோசனை

நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் ஆளுநரின் வாட்ஸ் அப் தகவலால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று சட்டப்பேரவைக்கு வந்த சபாநாயகர் வைத்திலிங்கம், பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க புதுவை பேரவையைச் சுற்றிலும் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். மாலை முதல் பாதுகாப்பு பேரவையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x