திமுக ஆட்சியை விமர்சிக்க திருமாவளவன் தயக்கம்: தமிழிசை கருத்து

திமுக ஆட்சியை விமர்சிக்க திருமாவளவன் தயக்கம்: தமிழிசை கருத்து
Updated on
1 min read

புதுச்சேரி: திமுக ஆட்சியின் மீது விமர்சனம் வைக்க திருமாவளவன் தயக்கம் காட்டுவதாக தமிழிசை குற்றம்சாட்டினார்.

புதுவை முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை, கடலூர் நிகழ்வுக்கு சென்று விட்டு புதுவைக்கு இன்று வந்தார். தனியார் விடுதிக்கு வந்த அவரை முதல்வர் ரங்கசாமி சந்தித்து சால்வை அணிவித்தார். அப்போது முதல்வர் ரங்கசாமிக்கு தமிழிசை வாழ்த்து தெரிவித்தார். அப்போது முதல்வர் ரங்கசாமியிடம், “உங்களது ஆசி எனக்கு எப்போதும் வேண்டும். அரசியலிலும் உங்களது ஆசி எனக்கு தேவை” என்று தமிழிசை கூறினார். இதற்கு முதல்வர் ரங்கசாமி கையை உயர்த்தி ஆசி வழங்குவது போல் வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் தமிழிசை கூறியது: “புதுவை முதல்வர் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். ஆதலால் மீண்டும் புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் அமையும். தமிழகமும்,புதுவையும் வரும் 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான் பயணிக்கும்.

புதுவையில் இந்த ஆட்சி தொடரும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்.புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறுவதற்கு சில வழிமுறைகள் இருக்கிறது. நானும் கோப்பை அப்போது அனுப்பினேன். நடைமுறை என்னவோ அதையொட்டி மத்திய அரசு செயலாற்றும்.

பட்டியலின மக்களுக்காக பாடுபடுவேன் என்று கூறும் திருமாவளவன் போன்றவர்கள் காதல் விவகார கொலைக்கு கண்டனம் சொல்கிறார்கள் தவிர, ஆட்சியின் மீது கடுமையான விமர்சனத்தை வைக்க தயங்குகிறார்கள். அறிவாலயத்துக்குச் சென்று எப்படி இருந்தாலும் கூட்டணியில் இருப்போம் எனக் கூறுகிறார்கள்.

இக்கொலைகள் தடுக்கப்பட வேண்டும். வேங்கை வயல் போன்ற நிகழ்வு நடக்கக் கூடாது என உறுதியாக கூறும் தன்மை அவரிடம் இல்லை. எதிர்ப்பை வலிமையாக சொல்வதில்லை. பாய்ந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் இங்கு பதுங்குகிறார்கள்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ரவிக்குமார் எம்.பி புதுவையில் பாதுகாப்புடன் இருக்கிறார். காவல் துறை அதிகாரிகள் கொலை செய்யப்படுகிறார்கள். காவல் நிலையத்துக்குள் தற்கொலை நடந்துள்ளது மிகுந்த வேதனை தருகிறது. வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற மத்திய அரசின் திட்டத்தின் காப்பி தான் உங்களுடன் ஸ்டாலின். நான்கரை ஆண்டுகளாக என்ன செய்தார்கள் என மக்கள் கேள்வி கேட்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in