திடீர் ரத்து, அடிக்கடி தாமதம்: எப்போது சீராகும் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை?

திடீர் ரத்து, அடிக்கடி தாமதம்: எப்போது சீராகும் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை?
Updated on
2 min read

சென்னை புறநகர் மின்சார ரயில்களின் சேவையில் அடிக்கடி பாதிப்பு ஏற்படுவதால், பயணிகள் நாள்தோறும் அவதிப்படுகின்றனர். இதற்கு முறையான தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையின் பொதுபோக்குவரத்தில் இதயமாக புறநகர் மின்சார ரயில் சேவை உள்ளது. மின்சார ரயில் சேவையை பொருத்தவரை, சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மற்றும் அரக்கோணம் உள்ளிட்ட பல்வேறு மார்க்கங்களில் தினசரி 630-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

இந்த ரயில்களில், தினசரி 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். ஏற்கெனவே, போதிய மின்சார ரயில்கள் இல்லாமல் பயணிகள் அவதிப்படும் நிலையில், சென்னையில் வழக்கமாக செல்லும் மின்சார ரயில்களின் சேவை அடிக்கடி ரத்து செய்யப்படுகிறது.

ரயில் பாதை மற்றும் பணிமனை பராமரிப்பு பணியால், வாரந்தோறும் 40-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது. இதுதவிர, சிக்னல் கோளாறு, மின்வயர் அறுந்து விழுவது, சில நேரங்களில் தடம் புரள்வது போன்ற விபத்துகளும் நடைபெறுகின்றன. இதனால், நாள்தோறும் பணிக்கு வந்து செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

தினமும் 45 நிமிடம் தாமதம்: இது குறித்து, ரயில் பயணிகள் கூறியதாவது: சென்னை புறநகரில் வசிப்போரில் பெரும்பாலானோர் மின்சார ரயில்களை நம்பி தான் இருக்கின்றனர். ஆனால், மின்சார ரயில் சேவை சீராக இயக்கப்படாததால், பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். அதிலும், சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை மார்க்கத்தில் தினசரி 15 முதல் 45 நிமிடங்கள் வரை மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

இதுபோல, சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில் சேவை அடிக்கடி 30 நிமிடங்கள் வரை தாமதமாகிறது. சிக்னல் கோளாறு உள்ளிட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை ரயில் சேவை பாதிக்கிறது.

இது குறித்து, திருவள்ளூர் ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் கே.பாஸ்கர் கூறியதாவது: சென்னை - திருவள்ளூர், சென்னை - கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட பல மார்க்கங்களில் வழக்கமான மின்சார ரயில் கூட தாமதமாக இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் பகலில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், நாள்தோறும் தாமதம் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண வேண்டும். இதுதவிர, புறநகர் மின்சார ரயில்கள் ஏன் தாமதமாக இயக்கப்படுகிறது, எங்கு பிரச்சினை இருக்கிறது என்பது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும்.

அம்ரித் பாரத் நிலைய மேம்பாட்டின் கீழ், ரயில் நிலைய மேம்பாடு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது. இதைவிட, ரயில்களை சீராக இயக்குவது மிக முக்கியம். இதில், நாள்தோறும் பிரச்சினை ஏற்படுகிறது, பராமரிப்பு பணி காரணமாக, மறு அறிவிப்பு வெளியிடாமல் 52 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்த ரயில்களை ரத்து செய்து அறிவித்து, 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்த ரயில்கள் இதுவரை மீண்டும் இயக்கப்படவில்லை. இதுதவிர, எந்த பாதிப்பு இல்லாத நேரத்திலும், 15 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை மின்சார ரயில்களுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

எனவே, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை கடற்கரை - தாம்பரம் உட்பட அனைத்து வழித்தடங்களிலும் மின்சார ரயில்களை சீராக இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்,” ரயில்களை பாதுகாப்பாக இயக்க, பராமரிப்பு பணி என்பது தவிர்க்க முடியாதது. சிறப்பு ரயில்கள் இயக்கம் போன்ற மாற்று ஏற்பாடுகளை முடிந்த வரை செய்கிறோம். மேலும், மின்சார ரயில் சேவை தாமதம் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கிறோம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in