

திருச்சி: சாதிய கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி வரும் 9, 11-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் அதிகரித்துவரும் சாதி ரீதியிலான கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இதுபோன்ற கொலைகளை தடுக்க உரிய வழிமுறைகளை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அந்த தீர்ப்பையும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறை நடைமுறைப்படுத்துவதில்லை. சாதி ரீதியிலான கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.
தமிழக முதல்வரும் ஏற்கெனவே தேர்தல் வாக்குறுதியில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ளார். எனவே, தமிழக அரசு மற்ற மாநில அரசுகளுக்கு முன்மாதிரியாக இந்த சட்டத்தை இயற்ற வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 11-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
முன்னதாக, எனது தலைமையில் சென்னையிலும், பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் தலைமையில் விழுப்புரத்திலும் வரும் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழகத்தில் லட்சக்கணக்கான வட மாநிலத் தொழிலாளர்களை வாக்காளர்களாக சேர்ப்பதற்கு முயற்சிகள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன.
மி்கவும் தீவிரமான இப்பிரச்சினை குறித்து முதல்வர் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக-பாஜக கட்சிகள் மட்டும்தான் உள்ளன. ஆனால், திமுக கூட்டணி சிதறப்போகிறது என்ற தங்கள் ஆசையை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களது அணியில் இருந்துதான் பலர் வெளியேறுகின்றனர். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.