Published : 22 Jul 2018 09:16 AM
Last Updated : 22 Jul 2018 09:16 AM

புதுக்கோட்டை மாவட்டத்தில் கணினிமயமானது ‘மொய் விருந்து’-நெரிசலை தவிர்க்க புதிய ஏற்பாடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரத்யேகமாக நடத்தப்பட்டுவரும் மொய் விருந்து விழா, கணினி மயமாகி இருப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

திருமணம், காதணி போன்ற விழாக்களில் மொய் செய்யும் முறையானது புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகாடு, மாங்காடு, கீரமங்கலம், கொத்தமங்கம், அணவயல் உள்ளிட்ட பகுதியில் மொய் விருந்து விழா எனும் பிரத்யேக விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

ஆடி மாதத்தில், சுமார் 20 பேர் சேர்ந்து ஒரே இடத்தில் நடத்தப்படும் இவ்விழாவில் அதிகபட்சமாக ஒரு டன் வரை ஆட்டுக் கறி சமைத்து அசைவ உணவு பரிமாறப்படுகிறது.

இப்பகுதியில் தனி நபருக்கு அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை மொய் வசூலாகி உள்ளது. சுமார் 25 ஆயிரம் பேர் மொய் வரவு- செலவு வைத்துள்ள இப்பகுதியில், நிகழாண்டில் சுமார் 2 ஆயிரம் பேர் மொய் விருந்து விழா நடத்த உள்ளனர்.

மொய் விருந்தில் பணம் எண்ணும் மிஷின்கள் பயன்படுத்து வது, வங்கி அலுவலர்களை வரவழைத்து பணியை எளிதாக்கிக்கொள்வது போன்ற நடைமுறைகள் கடந்த ஆண்டு பின்பற்றப்பட்டது. இந்நிலையில், நிகழாண்டு முதன் முறையாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே பெரியாளூரில் நேற்று நடைபெற்ற மொய் விருந்து விழாவில் கணினி மூலம் மொய் விவரங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதன் மூலம் மொய் பதிவு செய்தோருக்கு ரசீது கொடுத்ததுடன் அவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ் செய்தியும் அனுப்பப்பட்டது. மொய் எழுதுவதில் ஏற்படும் தாமதம் இம்முறையில் தவிர்க்கப் பட்டு, விரைவாக மொய் பதிவு செய்யப்படுவதால் இத் தொழில்நுட்பத்தை மக்கள் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து கணினி மூலம் மொய் பதிவு செய்த மதுரை, செக்காணூரணியைச் சேர்ந்த எம்.பிரபு கூறியது:

திருமண விழா, காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே மொய் எழுதுவதற்கான மென்பொருளை வடிவமைத் துள்ளோம். புதுக்கோட்டை மாவட் டத்தில் மொய் வசூலுக்கென்றே விழா நடத்தப்பட்டு வருவதை அறிந்து அதற்கேற்ப மென்பொருள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம் மூலம் மொய் விருந்தில் ஒரு கணினியில் ஒரு மணி நேரத்தில் 100 பேரின் மொய் விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்கான விவரங்களை மொய் செலுத்துவோருக்கு குறுஞ் செய்தியாக அனுப்புவதோடு ரசீதும் கொடுக்கப்படுவதால் முறைகேடு தடுக்கப்படுகிறது. மொய் பதிவு குறித்த அனைத்து விவரங்களும் மென்பொருள் மூலமாகவும், பிரின்ட் எடுத்தும் விழா நடத்துவோருக்கு கொடுக் கப்படுகிறது.

தகவல்களை பதிவேற்றுவதற்கு ஒருவர், பணம் வாங்குவதற்கு ஒருவர் என ஒரு கணினிக்கு இருவர் பணியாற்றுகின்றனர். ஒரு கணினிக்கு ரூ.3,500-ஐ கட்டணமாக வசூலிக்கிறோம் என்றார்.

இதுகுறித்து வடகாடு கோ.பழனிவேல் கூறியபோது, "இந்த தொழில்நுட்பம் மூலம் ஆன்ட்ராய்டு போனிலேயே தமிழில் மொய் வரவு-செலவை பார்த்துக்கொள்ளலாம் என்பது மிகவும் சிறப்பானது.

இதற்கென நோட்டு வைத்துப் பராமரிப்பது மிகவும் சிரமம். அந்தச் சிரமத்தை தவிர்க்க உதவுவதால் இந்த தொழில்நுட்பம், மொய் விருந்து நடத்துவோ ருக்கு மிகவும் பயனுள்ள ஒன்று" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x