புதுச்சேரியில் பேனர் தடைச் சட்டம் இருந்தும் ரங்கசாமியின் பிறந்த நாளுக்காக நகரெங்கும் பேனர்கள்!

படங்கள்: எம்.சாம்ராஜ்
படங்கள்: எம்.சாம்ராஜ்
Updated on
2 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் பேனர் தடைச் சட்டம் இருந்தும், பிறந்தநாளையொட்டி நகரெங்கும் முதல்வர் ரங்கசாமிக்கு அவரது ஆதரவாளர்கள் பேனர்கள் வைத்துள்ளனர். குறிப்பாக ரஜினியின் ‘கூலி’ பட ஸ்டைலில் ரங்கசாமியை அவரது தொண்டர்கள் பேனரில் வடிவமைத்துள்ளனர்.

1950 ஆகஸ்ட் 4-ம் தேதி பிறந்தவர் ரங்கசாமி. நடிகர் சிவாஜியின் தீவிர ரசிகர். இளம் வயதில் காமராஜருக்கு மன்றமும் நிறுவியவர். ஆண்டுதோறும் முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளும், தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் கொண்டாடுவது வழக்கம்.

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியின் முதல்வராக ஐந்தாவது ஆண்டில் இருப்பதால் இம்முறை ரங்கசாமியின் பிறந்தநாளை அதிக சிறப்பாக கொண்டாட அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம், மரக்கன்றுகள் நடுதல், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், ரத்த தான முகாம் என பல்வேறு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இதற்கு முன்னோட்டமாக நகரின் பல்வேறு பகுதிகளில் ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வண்ணம் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் பேனர்கள், கட்—அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக அரசியல் கட்சித் தலைவர்களை, அவருடைய உருவ படங்களை மட்டுமே பேனர்களில் பயன்படுத்தி வாழ்த்து தெரிவிப்பது உண்டு.

ஆனால், புதுவை முதல்வர் ரங்கசாமியை அவரது கட்சித் தொண்டர்களும், ஆதரவாளர்களும் தங்கள் விருப்பம் போல் திரைப்பட நடிகர்கள் உருவங்களில் பேனர்கள் அமைத்து வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அவரது பிறந்தநாள் வரும்போது பிரபலமாக இருக்கும் திரைப்படப் பாணியில் பேனர்களை வடிவமைப்பார்கள்.

இம்முறை ‘கூலி’ திரைப்பட பாணியில் ரஜினி பாணியில் முதல்வர் ரங்கசாமியின் படங்களை பேனர்களில் வைக்கத் தொடங்கியுள்ளனர். ரஜினியின் முகத்துக்கு பதிலாக ரங்கசாமி படத்தை வைத்து பேனரை வடிவமைத்துள்ளனர். மேலும் பல திரைப்படப் பாணியில் ரங்கசாமிக்கு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவைகளைப் புதிதாக அமைத்த சாலைகளைத் தோண்டி வைத்துள்ளனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரி முதல்வருக்கு சினிமா நடிகர் பாணியில் பேனர்கள் வைத்துள்ளனர். எந்த மாநிலத்திலும் இதுபோல் இல்லை. பொதுமக்கள் அவரை பார்க்கும் போது சினிமா நடிகரைப் போன்று பார்க்க வேண்டியுள்ளது. விபத்து ஏற்படும் வகையில் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்படுகின்றன. புதுச்சேரியை அழகுப்படுத்தும் நோக்கில் போஸ்டர் பேனர்கள் போன்றவை வைக்க கடந்த 2009-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதற்கான உள்ளாட்சித்துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர் ரங்கசாமி இதில் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்" என்று கேள்வி எழுப்புகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in