Published : 27 Jul 2018 08:08 AM
Last Updated : 27 Jul 2018 08:08 AM

சொந்த தேவைக்காக ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்துவதா?- ஓ.பன்னீர்செல்வத்துக்கு கமல்ஹாசன் கண்டனம்

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியின் மருத்துவ சிகிச்சைக்காக ராணுவ ஹெலி காப்டரைப் பயன்படுத்தியுள்ளது அரசியல் மாண்பு சீரழிந்து வருவதைக் காட்டுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீதான சொத்துக் குவிப்பு புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என அனைவரும் வலியுறுத்துவது வரவேற்கத் தக்கது. ஓ.பன்னீர்செல்வம் மட்டும் அல்ல, இந்த அரசே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை நான் வைத்து நீண்ட நாட்கள் ஆகிறது.

எம்ஜிஆர் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தபோது கூட தனியார் விமானத்தில்தான் பயணம் செய்தார். ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பியின் சிகிச்சைக்காக ராணுவ ஹெலிகாப்டரைப் பயன்படுத்தி உள்ளது அரசியல் மாண்பு சீரழிந்து வருவதைக் காட்டுகிறது.

8 வழிச்சாலை திட்டத்தைப் பற்றி நான் பேசக்கூடாது என பாஜக தேதிய செயலாளர் எச்.ராஜா எப்படிச் சொல்ல முடியும். சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்பவர்களைக்கூட கைது செய்யும் நிலைதான் தற்போது உள்ளது. கருத்து சுதந்திரம் கொஞ்சம், கொஞ்சமாக பறிக்கப்பட்டு வருகிறது. யாரும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தக்கூடாது என்ற பதட்ட சூழலில் ஆட்சியாளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் கொண்டுவரப் பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்டம் கண்துடைப்புக்கானது. அதனால், எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x