Published : 15 Jul 2018 02:04 AM
Last Updated : 15 Jul 2018 02:04 AM

கோவையில் கல்லூரி மாணவி பலியான விவகாரம்: போலி பயிற்சியாளரின் உதவியாளரும் கைது- சென்னையில் குடியிருந்த ஆறுமுகம் வீட்டுக்கு சீல்; மேலும் 4 பேரிடம் விசாரணை

பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது தனியார் கல்லூரி மாணவி பலியான விவகாரத்தில் கைதான போலி பயிற்சியாளரை வரும் 27-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டார். மேலும் 4 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கலைமகள் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சியில் மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறியதாவது: நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த ஆறுமுகத்துக்கு பெற்றோர் கிடையாது. சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டு, இடது காலில் ஊனம் ஏற்பட்டுள்ளது. பின்னர் வேலை தேடி அவர் சென்னைக்கு சென்றுள்ளார். பேராசிரியர் ஒருவர், அவர் பணியாற்றும் கல்லூரியில் விடுதி மாணவர்களைப் பார்த்துக் கொள்ளும் பணியில் சேர்த்து விட்டுள்ளார். அங்கு மாணவர்களுக்கு சிறு, சிறு பயிற்சிகள் அளித்து வந்த ஆறுமுகம், நாளடைவில் கயிற்றில் ஏறி, இறங்குவதற்கும் பயிற்சி அளித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து வெளியேறிய அவர், தான், பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பயிற்சியாளர் என்று கூறிக்கொண்டு, முகாம் நடத்துவதற்காக தனியார் கல்லூரிகளை அணுகியுள்ளார். இதையொட்டி, ஆறுமுகம் என்.டி.எம்.ஏ. (தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்) என்ற பெயரில் முகநூல் பக்கம் தொடங்கி, அதில் பலரை உறுப்பினர்களாகச் சேர்த்துள்ளார். பின்னர், ஒவ்வொரு கல்லூரியாகச் சென்று பயிற்சி அளித்து உள்ளார்.

ரூ.2.50 கோடி வசூல்

கடந்த 2011-ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் 1,275 கல்லூரிகளில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளார். பயிற்சிக்குப் பணமில்லை என்று கூறி, சான்றிதழுக்கு மட்டும் ரூ.50 கட்டணம் பெற்றுள்ளார். இவ்வாறு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.2.50 கோடி வசூலித்துள்ளார். பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் சின்னம் (லோகோ), பெயர், அதிகாரியின் பெயர் போன்றவற்றை போலியாக அச்சடித்து வழங்கியுள்ளார்.

இதுதவிர, பேரிடர் மேலாண்மை குறித்த 2 நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார் ஆறுமுகம். பொதுசேவைக்காக வெவ்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் 3 முறை விருதும் பெற்றுள்ளார். இவ்வாறு தனிப்படை போலீஸார் கூறினர்.

போலி அடையாள அட்டை

ஆறுமுகத்தின் பயிற்சிகளுக்கு உதவியாக இருந்ததாகவும், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த அசோக், சதீஷ், ஈரோடு தாமோதரன், ராமநாதபுரம் வினிதா, சத்தியமங்கலம் கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களும், பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் என்று, போலியாக அடையாள அட்டை தயாரித்து பயன்படுத்தி வந்துள்ளனராம்.

இவர்களில் அசோக் என்பவரை, ஆறுமுகத்தின் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். கோவை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்.2-ல் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்ட ஆறுமுகத்தை, வரும் 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஞானசம்பந்தன் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆறுமுகத்தை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி தனிப்படை போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவின் மீது நாளை விசாரணை நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்.

கல்லூரி நிர்வாகம் விளக்கம்

இந்த சம்பவம் குறித்து கலைமகள் கலை, அறிவியல் கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கல்லூரிகளில் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை (கடித எண் 24-1/2016) அனுப்பியிருந்தது. இந்நிலையில் ‘பயிற்சி அதிகாரி, பேரிடர் மேலாண்மை ஆணையம், தெற்கு மண்டலம், தமிழ்நாடு' என்ற முகவரியில் இருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் பேரிடர் மேலாண்மை முகாம் நடத்த தேதி முடிவு செய்து, தகவல் தெரிவிக்குமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் ஒரு பகுதியாக, இந்த முகாமை நடத்த வணிகவியல் துறை டீன் வி.விஜயலட்சுமி என்பவர் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, ஆறுமுகம் என்பவரிடம் இருந்து கடந்த ஜூலை 3-ம் தேதி கடிதம் வந்தது. இதையொட்டி, 12-ம் தேதி முகாம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆறுமுகத்துடன் 5 பேர் மட்டுமே வந்தனர். துணைக்கு, சில மாணவர்களை அழைத்துக் கொண்டனர்.

முகாமில், மாணவிகளை கயிற்றில் இறங்கச் செய்தபோது, மாணவி லோகேஸ்வரி சாளரத்தில் அமர்ந்து, கைகளை இறுக்கிப் பிடித்திருந்தார். அவரை பயிற்சியாளர் வலையில் விழுமாறு தள்ளியபோது, மாணவி சாளரத்தைப் பிடித்திருந்ததால், தலை உள்நோக்கித் திரும்பியது. கீழே விழுந்தபோது கழுத்துப் பகுதியில் பலமாக அடிபட்டது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கல்லூரிக் கல்வி இயக்குநரக கோவை மண்டல துணை இயக்குநர் கலா, அந்தக் கல்லூரிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதுடன், முகாம் நடைபெற்ற இடத்தையும் பார்வையிட்டார்.

வீட்டுக்கு சீல்

இதற்கிடையே, சென்னை அருகே மாம்பாக்கத்தில் ஆறுமுகம் குடியிருக்கும் வீட்டுக்கு போலீஸார் நேற்று சீல் வைத்தனர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானி கூறும்போது, “ஆறுமுகம் வீட்டை சோதனையிடப் போவதாக கோவை போலீஸார் கூறினார். இதனால் அவர்கள் வரும் வரை அந்த வீட்டுக்கு சீல் வைத்துள்ளோம். அவர்கள் சோதனையிட்ட பின்னர்தான் மற்ற தகவல்கள் தெரியவரும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x