ஓய்வுக்கு பின்னர் முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகம் வருகை: வழக்கமான பணிகளை தொடர்கிறார்

ஓய்வுக்கு பின்னர் முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகம் வருகை: வழக்கமான பணிகளை தொடர்கிறார்

Published on

சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பிய நிலையில், ஓய்வுக்குப் பிறகு இன்று தலைமைச் செயலகம் வருகிறார். இன்று முதல் அவர் வழக்கமான பணிகளைத் தொடர்வார் என்றும், பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை 21-ம் தேதி காலை நடைபயிற்சியின்போது தலைச்சுற்றல் ஏற்பட்டதால், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். ஆஞ்சியோ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்திய நிலையில், மருத்துவமனையில் இருந்தபடியே அவர் அரசுப் பணிகளை மேற்கொண்டார்.

குறிப்பாக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களுக்கு வந்திருந்த பொதுமக்களுடன் தொலைபேசி வாயிலாக பேசியதுடன், தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை மற்றும் தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக மண்டலப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் மோடியின் தமிழக வருகையின்போது, தமிழக வளர்ச்சிப் பணிகள் தொடர்பான மனுவை பிரதமரிடம் வழங்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவரது ஒப்புதலின்பேரில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடியிடம் வழங்கினார்.

உடல் நிலை சரியான நிலையில், கடந்த ஜூலை 27-ம் தேதி முதல்வர் வீடு திரும்பினார். பின்னர் சில தினங்கள் வீட்டில் ஓய்வில் இருந்த முதல்வர் ஸ்டாலின் இன்று மீண்டும் தலைமைச் செயலகத்துக்கு வருகிறார். பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, வழக்கமான பணிகளை அவர் மேற்கொள்வார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in