திண்டுக்கல்லில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம். படம்: நா.தங்கரத்தினம்.
திண்டுக்கல்லில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம். படம்: நா.தங்கரத்தினம்.

தமிழகத்தில் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும்: இந்து முன்னணி மாநிலத் தலைவர் தகவல்

Published on

திண்டுக்கல்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாடு குறித்து, "மாற்றம் தந்த முருக பக்தர்கள் மாநாடு - இந்த எழுச்சி திக்கெட்டும் பரவட்டும்" என்ற தலைப்பில் திண்டுக்கல்லில் இந்து முன்னணி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மதுரையில் நடைபெற்ற முருக பக்தர் மாநாடு, இந்துக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தி இருக்கிறது. இந்துக்களுக்காக வாதாட, போராட தொடங்கப்பட்ட இந்து முன்னணி, அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

திண்டுக்கல் மலைக் கோட்டையிலுள்ள அபிராமி அம்மன் கோயிலில் விக்ரகங்கள் இல்லை. இந்த கோயிலில் விக்ரகங்களை பிரதிஷ்டை செய்து குடமுழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறோம். அபிராமி அம்மன் பக்தர்கள் மாநாடு திண்டுக்கல்லில் நடத்த திட்டமிட்டு வருகிறோம்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும். கடந்த ஆண்டு 15 லட்சம் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதற்கு போதை கலாச்சாரமே காரணம். எனவே, போதைப் பொருள்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in