பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால் இந்தியாவில் கண்காட்சி தொழிலுக்கு ஏராளமான வாய்ப்புகள்: மத்திய சுற்றுலாத்துறை கூடுதல் செயலர்

பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால் இந்தியாவில் கண்காட்சி தொழிலுக்கு ஏராளமான வாய்ப்புகள்: மத்திய சுற்றுலாத்துறை கூடுதல் செயலர்
Updated on
1 min read

சென்னை: பொருளா​தா​ரம் மிகவே​மாக வளர்ந்து வரு​வ​தால் இந்​தி​யா​வில் கண்​காட்சி தொழிலுக்கு ஏராள​மான வாய்ப்​பு​கள் இருப்​ப​தாக மத்​திய சுற்​றுலாத் துறை கூடு​தல் செயலர் சுமன் பில்லா தெரி​வித்​தார். இந்​திய கண்​காட்சி தொழில் சங்​கம் சார்​பில், “இந்​தி​யா​வில் கண்​காட்​சி, கூட்​டம், கருத்​தரங்கு நடத்​தும் தொழில்​களுக்கு உகந்த சூழலை உரு​வாக்​கு​வது” என்ற தலைப்​பிலான ஒரு​நாள் கருத்​தரங்​கம், சென்​னை​யில் நேற்று நடந்​தது.

இக்​கருத்​தரங்​கை, மத்​திய சுற்​றுலாத் துறை கூடு​தல் செயலர் சுமன் பில்லா தொடங்கி வைத்​து பேசியதாவது: இந்​தி​யா​வில் தொழில்​துறை மிக வேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. சர்​வதேச விமான நிலை​யங்​களின் எண்​ணிக்கை இரு மடங்​காக அதி​கரித்​துள்​ளது. சாலை வசதி உள்​ளிட்ட உள்​கட்​டமைப்பு வசதி​கள் பிரமிக்​கதக்க வகை​யில் மேம்​பாடு அடைந்​துள்​ளன.

சர்​வ​தேச தரத்​தில் சாலைகள் அமைந்​துள்​ளன. உலகள​வில் இந்​திய பொருளா​தா​ரத்​தின் வளர்ச்சி மிக அதி​க​மாக இருக்​கிறது. உலக நாடு​களின் விருப்ப சந்​தை​யாக இந்​தியா மாறி​யுள்​ளது. இந்​தி​யா​வில் தொழில் தொடங்க வெளி​நாட்டு நிறு​வனங்​கள் மிகவும் ஆர்​வ​மாக உள்​ளன.

இத்​தகைய சூழலில், இந்​தி​யா​வில் கண்​காட்சி தொழிலுக்கு மிகப்​பெரிய அளவில் வாய்ப்​பு​கள் உள்​ளன. உலக அளவில் கண்​காட்சி தொழில் வர்த்​தகம் 850 பில்​லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்து வரு​கிறது. ஆனால், இந்​தி​யா​வில் இத்​துறை வர்த்​தகம் 50 பில்​லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில்​தான் உள்​ளது.

இத்​துறை​யில் உலக அளவில் நமது பங்​களிப்பு வெறும் 5 சதவீதம்​தான். இத்​துறை​யில் அதிக வாய்ப்​பு​கள் உள்ள நிலை​யில், தற்​போதைய வர்த்​தகம் மிக​வும் குறை​வாக இருக்​கிறது. கண்​காட்சி தொழில்​துறை​யில் கட்​டமைப்பு சரி​யாக இல்​லாததே வளர்ச்சி குறைவுக்கு முதன்மை காரணம் ஆகும். ஏராள​மான வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கக்​கூடிய இத்​துறை​யில் கவனம் செலுத்த வேண்​டியது அவசி​யம்.

மாநில அரசுகள் கண்​காட்சி தொழில்​துறைக்​கென தனி பிரிவை மாநில அளவிலும், நகரங்​கள் அளவிலும் ஏற்​படுத்த வேண்​டும். அதற்கு தேவை​யான நிதி​யுத​வியை மத்​திய அரசு செய்​யும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இக்​கருத்​தரங்​கில், இந்​திய கண்​காட்சி தொழில் சங்​கத்​தின் தலை​வர் சூரஜ் தவான், தென்​பி​ராந்​திய தலை​வர் டி.ஜி.ஸ்ரீகாந்த், தமிழ்​நாடு சுற்​றுலா வளர்ச்​சிக்​கழக மேலாண் இயக்​குநர் டி.கிறிஸ்​து​ராஜ், ஆந்​திரா சுற்​றுலா வளர்ச்​சிக் கழக மேலாண் இயக்​குநர் அம்​ர​பாலி கட்​டா, கர்​நாடகா சுற்​றுலாத் துறை ஆணை​யர் கே.​வி.​ராஜேந்​தி​ரா, அந்​த​மான் நிக்​கோ​பார் தீவு​கள் யூனியன் பிரதேசத்​தின் சுற்​றுலா துறை செயலர் ஜோதி குமாரி, கேரளா சுற்​றுலாத்​துறை இயக்​குநர் சிகா சுரேந்​திரன்​ உள்​ளிட்​டோர் கலந்துக் கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in