“அரசியல் சாசனம் கொடுத்த உரிமைகள் ‘ஓபிசி’ சமுதாயத்தினரை இன்னும் சென்றடையவில்லை”

“அரசியல் சாசனம் கொடுத்த உரிமைகள் ‘ஓபிசி’ சமுதாயத்தினரை இன்னும் சென்றடையவில்லை”
Updated on
1 min read

இந்திய அரசியல் சாசனம் கொடுத்த உரிமை, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இன்னும் முழுமையாகச் சென்று சேரவில்லை, என ‘ஓபிசி ரைட்ஸ்’ அமைப்பின் தலைவர் ரத்தின சபாபதி பேசினார்.

பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு மற்றும் ‘ஓபிசி ரைட்ஸ்’ அமைப்பின் சார்பில், இளையோர் விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. விழாவில், ‘ஓபிசி ரைட்ஸ்’ அமைப்பின் தலைவர் ரத்தினசபாபதி பேசியதாவது: இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டபோது நடந்த விவாதத்தில், நாடு ஒருமித்த வளர்ச்சி அடைவதற்கு, பல தலைமுறைகளாக கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வி வழங்க வேண்டும்.

அரசு நிர்வாகத்தில் அனைத்து சமுதாயத்தினரும் பங்கு பெறும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என முடிவெடுக்கப் பட்டது. அந்த சூழலில் கல்வி, வேலைவாய்ப்பு பெற வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற இந்திய அரசியல் சாசனம் தந்த உரிமை, 42 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை.

இந்நிலையில், வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, மண்டல் கமிஷனைக் கொண்டு வந்து, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தினர் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற வைத்தார். இருப்பினும், இந்திய அரசியல் சாசனம் கொடுத்த உரிமை, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இன்னும் முழுமையாகச் சென்று சேரவில்லை. நாடு முழுவதும் உள்ள 26 சமுதாயத்தை சேர்ந்தவர்களில், இன்று வரை, ஒருவர் கூட அரசு பணி பெறவில்லை என்பது அதற்கு உதாரணம். எந்த அரசியல் கட்சிகளும், இதனைக் கேட்பதில்லை.

பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, எங்கு, என்ன கல்வி கற்கலாம், கல்விக் கடன், வேலைவாய்ப்பு என முழுமையான வழிகாட்டுதலை ஓபிசி ரைட்ஸ் அமைப்பு வழங்கி வருகிறது. obcrights.org என்ற இணையதளத்தின் மூலம் மாணவர்கள் வழி காட்டுதலைப் பெறலாம். கட்சி சார்பில்லாமல், மாணவர், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோரின் நலன்களை காப்பதன் மூலம், சமுதாயத்தின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்த்து, நிரந்தர முன்னேற்றம் கொண்டு வர எங்கள் அமைப்பு பாடுபட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மாணவர் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு தேர்வில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முன்னதாக, மருத்துவம், சட்டம், பொறியியல், கலைக் கல்லூரி மாணவர்கள், பிற்படுத்தப் பட்டவர்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பில் உள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கிப் பேசினர்.

இந்நிகழ்வில் சக்தி மசாலா நிர்வாக இயக்குநர் சாந்தி துரைசாமி, ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் சின்னசாமி, தொழிலதிபர் ரபீக், ஓபிசி ரைட்ஸ் அமைப்பின் துணைத்தலைவர் வெள்ளிங்கிரி, ஈரோடு பிரிவு தலைவர் கலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in