மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஒப்புதலை விரைந்து வழங்க பிரதமரிடம் தமிழக அரசு அழுத்தம்

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஒப்புதலை விரைந்து வழங்க பிரதமரிடம் தமிழக அரசு அழுத்தம்
Updated on
2 min read

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான ஒப்புதல், நிதி ஒதுக்கீட்டை விரைந்து வழங்கவேண்டும் என, தூத்துக்குடிக்கு வந்த பிரதமர் மோடியிடம் தமிழக அரசு சார்பில், அமைச்சர் தங்கம் தென்னரசு மனு கொடுத்தார்.

மதுரையில் முதல் கட்டமாக திருமங்கலம் - ஒத்தக்கடை வரை 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு ‘மெட்ரோ ரயில் திட்டம்’ அமல்படுத்தப்படுகிறது. இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்து அதற்கான திட்ட மதிப்பீடும் தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலுக்கு காத்திருக்கும் நிலையில், இத்திட்டத்திற்கான நில ஆர்ஜிதம், மின்சாரம், போன்ற ஆயத்த பணிகளை முன்கூட்டியே மெட்ரோ திட்ட அதிகாரிகள் ஏற்கெனவே தொடங்கினர்.

இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலைய தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, தமிழக அரசு சார்பில், மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல், உரிய நிதி ஒதுக்கீடு , பல்வேறு தமிழக வளர்ச்சித் திட்டத்திற்கான நிதியை வழங்குதல் போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமரிடம் நேரில் வழங்கினார்.

இது குறித்து மதுரை மெட்ரோ நிறுவன திட்ட இயக்குநர் அரச்சுனன் கூறியது: மதுரையில் சுமார் ரூ.11,368 கோடியில் 26 ரயில் நிலையங்கள் உள்ளடக்கிய 32 கி. மீ., தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் குறித்த விரிவான அறிக்கை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் சில கூடுதல் தகவல்களை மத்திய அரசு கேட்ட நிலையில், அதையும், சரி செய்து அனுப்பி வைத்துள்ளோம். ஏற்கெனவே டெல்லிக்கு சென்று தமிழக அமைச்சர்களும் கோரிக்கை மனுவை மத்திய அரசிடம் வழங்கியுள்ளனர்.

நேற்று தூத்துக்குடிக்கு வந்த பிரதமரிடம் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் மற்றும் மத்திய அரசின் 50 சதவீத நிதியை விரைந்து வழங்க அழுத்தம் கொடுக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான மத்திய அரசின் ஒப்புதல், நிதி ஒதுக்கீடு விரைவில் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம். ஆனாலும், வழித்தடத்திற்கான நிலம் ஆர்ஜிதம், மின்சாரம் செல்லும் பகுதிகளை உருவாக்கும் முன்னேற்பாடு பணிகளை மதுரை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளோம்.

இதற்காக ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்துள்ளோம். கோவையை போன்று மதுரையிலும் ஆயத்த பணிகளை முன்கூட்டியே மேற்கொண்டுள்ளோம். பழமையான மதுரை நகர் பகுதியில் 5.5 கிலோ மீட்டர் தூரத்திற்கான வழித்தடம் தரைப்பகுதியில் திட்டமிட்டுள்ளோம். மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ஸ்டேஷன் அமைவதால்அதற்கான வழித்தடத்தை பாதுகாப்பாக அமைக்கப்படும்.

மெட்ரோ வழித்தடத்திற்கான நிலம் கையகத்தில் சென்னை போன்று மதுரையிலும் மக்களின் ஒத்துழைப்பு இருக்கும் என, நம்புகிறோம். கோவை, மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பரிந்துரையை மத்திய அரசு ஏற்ற நிலையில் இரண்டுக்கும் ஒன்றாகவே ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in