

அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதற்காக ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பொன்னேரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடுக்கு அவர் வருகை தந்தார். அங்கிருந்து காரில் ரோடு ஷோவாக கோயிலுக்கு வந்தார். வரும் வழியில் பாஜக தொண்டர்கள், பொதுமக்கள் அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.
பிரகதீஸ்வரர் கோயிலில் வருகை தந்த பிரதமர், அங்குள்ள சிற்பங்கள், கலாச்சாரத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியைப் பார்வையிட்டார். அங்கு கல்வெட்டுகள் குறித்து ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொண்டார். கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமருக்கு திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.