திமுக, பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு, நாற்காலி வீச்சு - பிரதமர் மோடி நிகழ்வில் பரபரப்பு

படம்: mu. Lakshmi Arun
படம்: mu. Lakshmi Arun
Updated on
1 min read

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான முனையத்தை திறந்து வைத்து பிரதமர் பேசிக் கொண்டிருந்த போது, திமுக, பாஜகவினர் தங்களது தலைவர்களை வாழ்த்தி போட்டி போட்டு தொடர்ச்சியாக கோஷமிட்டனர். இரு கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்ததுடன் நாற்காலிகளை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய விமான நிலைய முனைய திறப்பு விழா மற்றும் பல்வேறு திட்டங்கள் தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு நேற்று இரவு 7.30 மணிக்கு வந்தார். விழா பந்தலில் திமுக, பாஜக கட்சி தொண்டர்கள் அமருவதற்கு ஏதுவாக தலா 6 ஆயிரம் இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாலை 4 மணி முதல் கட்சியினர், பொதுமக்கள் விழா பந்தலுக்கு வந்தனர். அப்போது முதலே திமுகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தியும், பாஜகவினர் பிரதமர் மோடியை வாழ்த்தியும் கோஷமிட்டவாறு இருந்தனர்.

பிரதமர் 7.50 மணிக்கு விழா மேடைக்கு வந்தார். 8.15 மணிக்கு அவர் பேசத் தொடங்கினார். அப்போதும் இரு கட்சியினரும் கூச்சலிட்டவாறு இருந்தனர். நேரம் செல்லச் செல்ல கூச்சல் அதிகமானது. மேலும், இரு கட்சியினரும் தங்களது கட்சி வண்ணத்துடன் கூடிய துண்டுகளை தலைக்கு மேல் தூக்கி கைகளால் சுழற்றியவாறு கோஷமிட்டபடி இருந்தனர். இதனால் பிரதமர் மோடி பேசுவதை யாராலும் சரியாக கேட்க முடியவில்லை.

திடீரென இரு கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக இந்த களேபரம் நடந்தது. போலீஸார் இரு கட்சியினரையும் சமாதானப்படுத்த முயன்றும் பயனளிக்கவில்லை. இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமரை கண்டித்து காங்கிரஸார் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்: தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு தர மறுத்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை திறந்து வைக்க வந்த பிரதமர் மோடியை கண்டித்து தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமி்ட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பழைய பேருந்து நிலையம் முன்பு திரண்டனர்.

பின்னர் கருப்புக் கொடிகளை கையில் ஏந்தி கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட 33 பேரை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in