Published : 21 Jul 2018 07:39 PM
Last Updated : 21 Jul 2018 07:39 PM

தற்பெருமை மன்னர் குறித்து முதல்வர் சொன்ன குட்டிக்கதை

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று சென்னையில் நடைபெற்ற ஆச்சார்ய ஸ்ரீ மஹாஸ்ரமண் சதுர்மாஸ் பிரவாஸ் விழாவில் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது அன்பு, அறம் நிலைத்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், தற்பெருமை கூடாது என்பதை வலியுறுத்தும் வகையிலும் ஒரு குட்டிக் கதையைக் கூறினார்.

முதல்வர் கூறிய குட்டிக்கதை:

''ஒரு மன்னர், அவர் சிறந்த வீரன் ஆகையால், தனது சாம்ராஜ்யத்தை அடிக்கடி விஸ்தரித்துக் கொண்டிருந்தார். அவர் வெற்றி பெற்ற நாடுகளிலிருந்து கிடைத்த

வைரம், வைடூரியம், நவரத்தினம் ஆகிய கற்கள் மூலம் தனது கஜானாவை நிரப்பி இருந்தார். அதனால் அவரிடம் தற்பெருமை அதிகமாயிற்று.

ஒரு நாள், ஒரு புகழ் பெற்ற துறவி அவரது அரண்மைனைக்கு வந்தார். மன்னர், துறவியிடம், தான் வென்ற நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட வைரக்கற்களைக் காட்டி மிகவும் பெருமைப்பட்டார்.

‘இதைவிட ஒளிவீசும் கற்களை கண்டதுண்டா’ என்று கேட்டார். அதற்கு அந்தத் துறவி, ‘ஆம், நான் இதைவிட சிறந்த கற்களைப் பார்த்திருக்கிறேன்’ என்று கூறினார். உடனே அந்த மன்னர், ‘நான் அதனை உடனடியாகப் பார்க்க வேண்டும்’என்று கூறினார். ‘உடனே பார்க்கலாம், அதுவும் உங்கள் நாட்டின் எல்லையில்தான் உள்ளது’ என்றார்.

பிறகு மன்னரை அந்த இடத்திற்கு அழைத்துக்கொண்டு சென்றார்.

ஊரின் எல்லையை அடைந்து அரண்மனைக்குச் சொந்தமான சத்திரத்திற்குள் அந்தத் துறவி புகுந்தார். அங்கு சென்று மன்னரிடம் தானியம் அரைக்கும்

கல் ஒன்றினைக் காண்பித்து, “இது, வழிப்போக்கர்கள் இங்கு வந்து தங்கும்போது அவர்களுக்கு உணவு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கல். ‘இந்தக் கல் உன்னிடம் உள்ள கல்லை விட மிகவும் பெரியது’ என்றார்.

“ஏனென்றால், உன் மூதாதையர் காலந்தொட்டு இந்தக் கல் இங்கே இருக்கிறது. இங்கு தங்குவோர் அனைவரின் பசியையும் போக்கி, அரச வம்சத்தின் புகழை ஞாபகப்படுத்துகிறது. பல பசியாறிய வழிப்போக்கர்கள் உன்னையும் உன் மூதாதையர்களையும் வாழ்த்தி வணங்கிவிட்டுச் செல்கின்றனர். ஆனால், உன்னிடம் உள்ள வைரக்கற்கள் அதை வைத்திருந்த அரசர்களை மட்டுமின்றி பல்லாயிராக்கணக்கான வீரர்களின் உயிர்களைப் பறித்தவை.

எனவே, பல்லாயிரக்கணக்கோரின் பசியைப் போக்கிய இந்தக் கல் சிறந்ததா? பல்லாயிரக்கணக்கானோரின் உயிரைப் பறித்துக்கொண்டு வந்த இந்த வைரக்கற்கள் உயர்ந்ததா?”என்று அந்தத் துறவி, மன்னரிடம் கேட்டார்.

உடனே மன்னர், ‘சுவாமி! தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. இனிமேல் நான் உயிர் உள்ளவரை போர் புரியமாட்டேன். அன்பே என் வழியாகக் கொண்டு வாழ்வேன்’ என்று துறவியிடம் உறுதி அளித்தார்.

அதன் பின்னர் அவர் போர் புரிதலை விட்டொழித்து, அகிலம் போற்றும் மாமன்னராகத் திகழ்ந்தார்.

இந்தக் கதையின் மூலம், ‘அன்பு’ மற்றும் ‘அறம்’ ஆகியவைதான் என்றும் நிலைத்து இருப்பது என நாம் தெரிந்து கொள்ளலாம்.’’

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கதையைக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x