டாக்டர் பி.நம்பெருமாள்சாமி காலமானார்: தலைவர்கள் இரங்கல்

டாக்டர் பி.நம்பெருமாள்சாமி
டாக்டர் பி.நம்பெருமாள்சாமி
Updated on
2 min read

மதுரை: மதுரை அரவிந்த கண் மருத்​து​வக் குழு​மத்​தின் முன்​னாள் தலை​வர் பி.நம்​பெரு​மாள்​சாமி (85) நேற்று கால​மா​னார். அவரது உடல் தேனி அருகே சொந்த ஊரில் இன்று தகனம் செய்​யப்​படு​கிறது. அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்​வர் மற்​றும் தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

உடல் நலக்​குறை​வால் சென்னை தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்​று​வந்த நம்​பெரு​மாள்​சாமி நேற்று அதி​காலை கால​மா​னார். அவரது உடல் மதுரைக்​குக் கொண்டு வரப்​பட்​டு, அண்ணா நகரில் உள்ள அவரது வீட்​டில் அஞ்​சலிக்​காக வைக்​கப்​பட்​டுள்​ளது. தேனி மாவட்​டத்​தில் உள்ள அவரது சொந்த ஊரான அம்​பாச​முத்​திரத்​தில் இன்று (ஜூலை 25) நம்​பெரு​மாள்​சாமி​யின் உடல் தகனம் செய்​யப்​படு​கிறது.

டாக்​டர் நம்​பெரு​மாள்​சாமி அரவிந்த் கண் மருத்​து​வ​மனை குழு​மத் தலை​வ​ராக​வும், கண் பராமரிப்பு அமைப்​பின் நிறுவன உறுப்பின​ராக​வும் இருந்​தார். அரவிந்த கண் பராமரிப்பு அமைப்​பின் தலை​வர், ஆராய்ச்​சிப் பிரிவு இயக்​குநர் மற்​றும் அரவிந்த்கண் மருத்​துவ அறக்​கட்​டளை தலை​வ​ராக​வும் பொறுப்பு வகித்​தார். மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனை​யில் மருத்துவப் பணியை தொடங்​கிய இவர், நாட்​டின் முதல் குறைந்த பார்வை உதவி மருத்​து​வ​மனையை 1967-ல் நிறு​வி​னார்.

அரவிந்த் கண் மருத்​து​வ​மனை​யில் ரெட்​டினா விட்​ரியஸ் கிளினிக்கை 1979-ல் தொடங்​கிய இவர், கிராமப்​புறங்​களில் கண் பார்வை சிகிச்சை மையங்​களை மேம்​படுத்​தி​னார். அரவிந்த் மெய்​நிகர் கண் மருத்​துவ அகாட​மியை நிறு​வி​னார். டாக்​டர் ஜி. வெங்​கட​சாமி கண் ஆராய்ச்சி நிறு​வனத்தை நிறு​வுவ​தில் இவர் முக்​கியப் பங்கு வகித்​தார்.

இவருக்கு 2006-ல் இந்​திய மருத்​து​வக் கழகம் சார்​பில் சிறந்த மருத்​துவ ஆசிரியர் பிரி​வில் டாக்​டர் பி.சி.​ராய் விருது வழங்​கப்​பட்​டது. 2007-ல் பத்மஸ்ரீ விருது வழங்​கப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது. நீரிழிவு விழித்​திரை நோயால் ஏற்​படும் குருட்​டுத்​தன்மை அதி​கரித்து வரு​வது பற்றி ஆழ்ந்த கவலை கொண்ட இவர், அரிமா சங்​கத்​துடன் இணைந்து லயன்​ஸ்​-அர​விந்த் நீரிழிவு விழித்​திரை நோய் இயல் திட்​டத்தை தொடங்​கி​னார்.

இவரது முன்​முயற்​சி​யால் டாக்​டர் ஜி. வெங்​கட​சாமி கண் ஆராய்ச்சி நிறு​வனத்​துக்​கான தனிக் கட்​டிடம் மதுரை​யில் கட்​டப்​பட்​டது. பல லட்​சம் ஏழை மக்​கள் பலனடை​யும் வகை​யில் கண் மருத்​துவ சிகிச்​சைக்​கும், அதன் கட்​டமைப்​புக்​கும் இது​போன்ற பல்​வேறு உதவி​களைப் புரிந்​தவர் டாக்​டர் நம்​பெரு​மாள்​சாமி. இவரது மறைவுக்கு ஆளுநர், முதல்​வர் உட்பட பல்​வேறு அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் இரங்கல் தெரிவித்​துள்​ளனர்.

ஆளுநர் ஆர்​.என்​.ர​வி: எண்​ணற்ற மக்​களின் வாழ்க்​கையை ஒளிரச் செய்த தொலைநோக்​குப் பார்​வை​யாளர் நம்​பெரு​மாள்​சாமி மறை​வால் வேதனையடைந்​தேன். அரவிந்த் கண் மருத்​து​வ​மனை மூலம் அவர் வழங்​கிய தன்​னலமற்ற சேவை பல தலைமுறைகளுக்கு ஊக்​கமளிக்​கும்.

முதல்​வர் ஸ்டா​லின்: நாட்​டின் முதல் விழித்​திரை சிறப்பு மருத்​து​வர் என்ற புகழ்​பெற்ற நம்​பெரு​மாள்​சாமி​யின் மறைவு மிக​வும் வேதனை அளிக்​கிறது. லட்​சக்​கணக்​கான மக்​களுக்​குக் கண்​பார்வை அளித்த இவரிடம் பயின்ற நூற்​றுக்​கணக்​கான மாணவர்களும் மருத்​து​வர்​களாகி ஏழை மக்​களுக்​குக் கண் சிகிச்சை அளித்து வரு​கின்​றனர். நம்​பெரு​மாள்​சாமி​யின் மறைவு மருத்​து​வத் துறைக்​கும், மதுரை மக்​களுக்​கும் பேரிழப்​பாகும்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: அடித்​தட்டு மக்​களுக்கு பார்வை அளித்து பெரும் சேவை​யாற்​றிய நம்​பெரு​மாள்​சாமி​யின் மறைவு மிகுந்த துயரம் அளிக்​கிறது. அவரது குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக் கொள்​கிறேன்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: ஆயிரக்​கணக்​கான ஏழை மக்​களுக்கு பார்வை கிடைக்க செய்த நம்​பெரு​மாள்சாமி கால​மான செய்​தி​யறிந்து அதிர்ச்சி அடைந்​தேன். மனிதநே​யத்​தின் அடை​யாள​மாக வாழ்ந்து வந்த அவரது மறைவு தமிழ் சமூகத்​துக்கு பேரிழப்​பாகும்​. இதே​போல, பாமக தலை​வர் அன்​புமணி, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் உள்ளிட்​டோரும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in