கொலை முயற்சி வழக்கில் முன் ஜாமீன்: கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிபதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

கொலை முயற்சி வழக்கில் முன் ஜாமீன்: கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிபதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கொலை முயற்சி வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கியது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிலத்தை அபகரிக்கும் நோக்கில், தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, தன்னையும், தனது மகனையும் தாக்கியதாக, எஸ்.செல்லம்பட்டு பஞ்சாயத்து தலைவர் அறிவழகி, அவரது கணவர் உள்ளிட்டோருக்கு எதிராக, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.லக்‌ஷ்மி பாலா என்பவர் சங்கராபுரம் போலீசில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி லக்‌ஷ்மி பாலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.காசிராஜன், தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த புகார்தாரர் மருத்துவமனையில் இருந்து ஜூலை 3ம் தேதி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டதாக அரசு வழக்கறிஞர் கூறியதை அடுத்து, குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு கள்ளக்குறிச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியதாகவும், ஆனால் புகார்தாரர் ஜூலை 9-ம் தேதி தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக கூறினார்.

இது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்த வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர், விசாரணை அதிகாரி அளித்த தகவலின் அடிப்படையிலேயே, தாக்கப்பட்டவர் ஜூலை 3 ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆனதாக, அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார்.

இதையடுத்து நீதிபதி பி.வேல்முருகன், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கியது குறித்து, ஜூலை 28-ம் தேதி ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கமளிக்கும்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in