Published : 10 Jul 2018 07:46 AM
Last Updated : 10 Jul 2018 07:46 AM

கிறிஸ்டி நிறுவனத்தில் 5 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு: நிறுவன உரிமையாளரிடம் 19 மணி நேரம் விசாரணை; ‘பென் டிரைவில்’ முக்கிய விவரங்கள் சிக்கியதாக தகவல்

திருச்செங்கோடு கிறிஸ்டி நிறுவனத்தில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் முட்டை விநியோகம் செய்து வருகிறது. இதுபோல், சத்துமாவு, பருப்பு உள்ளிட்டவையும் ஒப்பந்த அடிப்படையில் விநியோகிக்கிறது. இவை தவிர, பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது வரி ஏய்ப்பு, முட்டை விநியோகத்தில் முறைகேடு செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 5-ம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோட்டில் உள்ள நிறுவனத்துக்கு சொந்தமான குடோன்களில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இதுபோல், திருச்செங்கோடு வட்டூரில் உள்ள நிறுவன உரிமையாளர் பி.எஸ். குமாரசாமி வீடு, நிறுவன ஆடிட்டர்கள் ராமச்சந்திரன், சங்கர் ஆகியோர் வீடுகளில் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது.

இதனிடையே 2 தினங்களுக்கு முன்பு நிறுவனத்தின் பின்புறம் உள்ள எஸ்பிஎஸ் நகர் குடியிருப்பு ஒன்றில் வைத்து நிறுவன காசாளர் கார்த்திகேயன் (32) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, வருமான வரித்துறையினரை ஏமாற்றி தப்ப முயன்ற அவர், மாடியில் இருந்து குதித்ததில் முதுகு தண்டுவடத்தில் காயமடைந்துகோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த தகவலின்படி திருச்செங்கோடு தோக்கவாடியில் உள்ள கார்த்திகேயன் வீட்டில் இருந்து ஏராளமான பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த பென் டிரைவ்களில் சத்துணவு முட்டை டெண்டர் விவரம் உள்ளிட்ட ஏராளமான தகவல்கள் அடங்கியிருப்பதாக வருமான வரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில் நிறுவன உரிமையாளர் குமாரசாமியின் மனைவி நளினி சுந்தரி மற்றும் 2 மகள்கள் ஆகியோரிடமும் வருமான வரி அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே நேற்று முன்தினம் காலை நாமக்கல் மாவட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியிடம், மாவட்டம் முழுவதும் நிறுவனத்துக்கு சொந்தமான குடோன்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர், நள்ளிரவு 12 மணியளவில் ஆண்டிபாளையத்தில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்துக்கு குமாரசாமி அழைத்து வரப்பட்டு விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அவரிடம் மட்டும் 19 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த 5 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை விசாரணை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. இரவு 7 மணியளவில் நிறுவனத்தில் இருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் வாகனங்களில் வெளியேறினர். சோதனை மற்றும் விசாரணை, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக எந்த தகவலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x