ஊட்டி தாவரவியல்‌ பூங்காவில்‌ 2-ம்‌ சீசனுக்கான நடவுப்பணிகள்‌ தொடக்கம்: 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு

ஊட்டி தாவரவியல்‌ பூங்காவில்‌ 2-ம்‌ சீசனுக்கான நடவுப்பணிகள்‌ தொடக்கம்: 5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு
Updated on
1 min read

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான நடவுப் பணிகள் தொடங்கியது.

நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால், இதுவே முதல் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளி மாநிலங்களில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால், இவ்விரண்டு மாதங்கள் இரண்டாம் சீசனாக அனுசரிக்கப்படுகிறது.

முதல் சீசன் போது, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனைக் காண தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம்.

அதேபோல், இரண்டாம் சீசனின் போது மலர் கண்காட்சி நடத்தாத போதிலும், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல், தொட்டிகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்படும். இந்நிலையில், இரண்டாம் சீசனுக்கான நாற்று நடவு பணிகள் இன்று தொடங்கியது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா மலர் நாற்றுக்கள் நடவு பணிகளை தொடங்கி வைத்தார். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘இரண்டாம் சீசனுக்காக கொல்கத்தா, காஷ்மீர்‌, பஞ்சாப்‌, புனே போன்ற இடங்களிலிருந்து இன்கா மேரி கோல்டு, பிரெஞச்‌ மேரிகோல்டு, ஆஸ்டர்‌, வெர்பினா, ஜூபின்‌, கேணீடிடப்ட்‌, காஸ்மஸ்‌, கூபியா, பாப்பி, ஸ்வீட்‌ வில்லியம்‌, அஜிரேட்டம்‌, கிரைசாந்திமம்‌, கலண்டுலா, லெக்கைசம்‌, சப்னேரியா போன்ற 60 வகைகளில்‌ பல்வேறு வகையான விதைகள்‌ பெறப்பட்டு சுமார்‌ 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வண்ண மலர்ச் செடிகள்‌ இரண்டாவது சீசனுக்காக மலர்ப்பாத்திகளில்‌ நடவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 15 ஆயிரம் தொட்டிகளில்‌ சால்வியா, டெய்சி, டெல்பினியம்‌, டேலியா, ஆந்தூரியம்‌, கேலா லில்லி போன்ற 30 வகையான மலர்ச்செடிகள்‌ நடவுப்‌ பணியும்‌ துவக்கி வைக்கப்பட்டது. இம்மலர்த்‌ தொட்டிகள்‌ மலர்க்காட்சித்‌ திடலில்‌ அடுக்கி வைக்கப்பட்டு சுற்றுலாப்‌ பயணிகள்‌ மற்றும்‌ பொது மக்களின்‌ கண்களுக்கு விருந்தாக ஒரு மாத காலம்‌ வரை திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு இரண்டாம்‌ சீசனுக்காக செப்டம்பர்‌ மாதம்‌ இரண்டாம்‌ வாரத்தில்‌ மலர் அலங்காரங்கள் தொடங்கப்படவுள்ளது. இதனை காண சுமார்‌ 3 லட்சம்‌ சுற்றுலா பயணிகள்‌, பொதுமக்கள்‌ செப்டம்பர்‌ மற்றும்‌ அக்டோபர்‌ மாதங்களில்‌ வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றனர். இந்நிகழ்ச்சியில், தோட்டக்கலை இணை இயக்குநர்‌ சிபிலா மேரி, உதவி இயக்குநர்கள் நவநீதா, ஜெயலட்சுமி, பைசல், அனிதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in