Published : 12 Jul 2018 11:52 AM
Last Updated : 12 Jul 2018 11:52 AM

சம்பா சாகுபடிக்காக ஆகஸ்ட் 15-ம் தேதி மேட்டூர் அணையை திறக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

டெல்டா சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 15-ம் தேதி பாசனத்திற்கான நீரை தமிழக அரசு திறந்துவிட வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக விவசாயிகள் இந்த வருடம் சம்பா சாகுபடி செய்வதற்கு ஏதுவாக மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15-க்குள் திறக்க வேண்டிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் காவிரியில் இருந்து அணைகளுக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை எட்டும் நிலை உள்ளது. எனவே தமிழக அரசு ஆகஸ்ட் 15-ல் டெல்டா சம்பா சாகுபடிக்காக பாசன நீரை திறந்துவிட வேண்டும். கடந்த 7 ஆண்டுகளில் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் நடைபெற வேண்டிய குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைக்கப்பெறாமல் ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் கோடி வரையில் இழப்பு ஏற்பட்டது. அதே போல் சுமார் 25 லட்சம் ஏக்கரில் நடைபெற வேண்டிய சம்பா சாகுபடியும் போதிய தண்ணீர் இல்லாமல் மகசூல் பெற முடியாமல் சுமார் 10 ஆயிரம் கோடி வரையில் இழப்பு ஏற்பட்டது.

இச்சூழலில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, ஆணையக் கூட்டமும், ஒழுங்காற்றுக்குழு கூட்டமும் முடிவடைந்த நிலையில் தமிழகத்துக்கான காவிரி நதி நீரை இனிமேல் உரிய காலத்தில், உரிய நேரத்தில், முறையாக, முழுமையாக திறந்துவிட ஆணையம் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை மத்திய பாஜக அரசு உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் கர்நாடக அரசு தன்னிச்சையாக, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக ராசிமணல், மேகதாது ஆகியவற்றில் அணைக்கட்ட முயற்சி மேற்கொள்ளக் கூடாது என்பதில் ஆணையம் உறுதியாக இருக்க வேண்டும்.

குறிப்பாக காவிரி நதிநீர் பங்கீடு சம்பந்தமாக அந்தந்த மாநிலத்துக்கு உரிய தண்ணீர், உரிய காலத்தில், முழுமையாக கிடைத்திட வேண்டும் என்பதிலும், அணைக்கட்டுவதில் தன்னிச்சையாக எந்த ஒரு மாநிலமும் முடிவெடுக்கக்கூடாது என்பதிலும், மாநிலங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் எதேச்சதிகாரத்தோடு அறிவிப்பை வெளியிடக்கூடாது என்பதிலும் - ஆணையம், மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை உறுதியாக இருக்க வேண்டும்.

தமிழக அரசு காவிரியில் இருந்து தமிழகத்துக்கு இந்த மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதம் ஆகியவற்றை தொடர்ந்து இனி வரும் காலம் தோறும் உரிய பங்கீடு சரியாக கிடைக்க வேண்டும் என்பதில் முக்கிய கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

மேலும் தமிழக அரசு குடிமராமத்துப் பணிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளது. இதன் மூலம் ஆய்வுப் பணிகளின் நிலை குறித்து மாவட்டம் தோறும் விவசாயிகளோடு ஆய்வுக்கூட்டங்கள் நடத்திட வேண்டும்.

ஆய்வுக்கூட்டங்கள் மூலம் தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் முறையாக நடைபெற்று, நீர் நிலைகள் பாதுகாப்பட்டு, நீர் ஆதாரம் சேமிக்கப்பட்டு தமிழகத்துக்கு தண்ணீர் ஆண்டு தோறும் பஞ்சம் இல்லாமல் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆளும் ஆட்சியாளர்கள் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x