Published : 28 Jul 2018 07:45 AM
Last Updated : 28 Jul 2018 07:45 AM

கர்நாடகாவிலிருந்து நீர் வரத்து அதிகரிப்பு; மேட்டூர் அணையில் இருந்து 60,574 கனஅடி நீர் திறப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது

கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து கூடுதலான நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 60, 574 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான மேட்டூர் அணை கடந்த 23-ம் தேதி தனது முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணை நிரம்பிவிட்டதன் காரணமாக, 23-ம் தேதி தொடங்கி தற்போது வரை அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரி நீராக வெளியேற்றப்படுவது தொடர்கிறது.

இதனிடையே, கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்வதால் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளுக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளது. இந்த இரு அணைகளும் ஏற்கெனவே நிரம்பிவிட்டதால், அவற்றுக்கு வரும் நீர் முழுவதும் உபரியாக காவிரியில் திறக்

கப்பட்டு மேட்டூர் வருகிறது. நேற்றுகாலை கர்நாடகாவின் கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 48,780 கனஅடி நீரும், கபினி அணையில் இருந்து விநாடிக்கு 26,200 கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளது.

எனவே, பாதுகாப்பு கருதி மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை விட, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு சற்று கூடுதலாக்கப்பட்டுள்ளது. அணைக்கு  நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 61,291 கனஅடி வருகிறது. இதையடுத்து அணையில் இருந்து விநாடிக்கு 60,574 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் மட்டம் நேற்று காலை 120.31 அடி. நீர் இருப்பு 93.96 டிஎம்சி. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x