Published : 07 Jul 2018 08:58 PM
Last Updated : 07 Jul 2018 08:58 PM

நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த முயல்வது கண்டனத்துக்குரியது: முத்தரசன்

இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த முயல்வது கண்டனத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்காக மத்திய அரசு நடத்தும் நீட் நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நடத்தப்படும். பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும் இத்தேர்வு எட்டு அமர்வுகளில் நடத்தப்படும். இத்தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். இரண்டு முறை நடத்தப்படும் தேர்வுகளையும் மாணவர்கள் எழுதலாம். இரண்டு தேர்வுகளில் எதில் அதிக மதிப்பெண்ணை மாணவர்கள் பெறுகிறார்களோ,அந்த மதிப்பெண்ணை மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று கூறியுள்ளார்.

ஆன்லைன் மூலம் இளநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வை நடத்தினால், கிராமப்புற மாணவர்கள் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்று சொல்லிவிட்டு, பல்வேறு அமர்வுகளில், பல்வேறு வினாத்தாள்கள் அடிப்படையில் நீட் தேர்வை நடத்துவது கண்டனத்திற்குரியது. நீட் தேர்வை பல அமர்வுகளில் நடத்துவது முறைகேடுளுக்கே வழிவகுக்கும். பாரபட்ச போக்கு ஏற்படும்.

நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் இல்லாத பொழுது, ஒரே தரப்பட்டியல் எவ்வாறு வெளியிட முடியும்? இது குழப்பங்களையே ஏற்படுத்தும். மத்திய அரசின் இந்தத் திட்டம், மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது. எனவே, நீட் தேர்வை பல்வேறு அமர்வுகளில் நடத்தும் முடிவையும், ஆன்லைன் மூலம் நடத்தும் முடிவையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.

நீட் நுழைவுத் தேர்வுக்காக மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தில் பெரும்பகுதி அதை நடத்தும் அமைப்புகளுக்கு லாபமாகச் செல்கிறது. எனவே, நீட் நுழைவுத் தேர்வுக்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுமையாக விலக்களிக்க வேண்டும்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை ,முதுநிலை மருத்துவ இடங்களுக்கு, நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசின் சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுக்காதது கண்டனத்திற்குரியது.

மத்திய அரசு ,மருத்துவக் கல்வியிலும், கல்வியிலும் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் செயல்படுவது கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிரானது. மத்திய அரசின் இத்தகைய போக்கை முறியடிக்க அனைத்து இடது சாரி ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரண்டு போராடிட முன் வர வேண்டும்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x