இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மனுவில், “நடிகை வனிதா விஜயகுமார், நடன இயக்குநர் ராபர்ட் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘மிசஸ் அண்ட் மிஸ்டர்’. இந்தப் படத்தில் எனது இசையில் வெளிவந்த 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் இடம் பெற்ற. ‘சிவராத்திரி’ பாடல் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது காப்புரிமை மீறிய செயலாகும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு செந்தில்குமார் ராமமூர்த்தியிடம் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இளையராஜா தரப்பில், மிசஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் அனுமதியின்றி தனது பாடலை பயன்படுத்தியதோடு, அந்தப் படத்தின் விளம்பரங்களில் தனது பெயரும் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதற்கும் தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்போது வனிதா விஜயகுமார் தரப்பில், சம்பந்தப்பட்ட பாடலை, எக்கோ நிறுவனத்தின் அனுமதியைப் பெற்று பயன்படுத்தியதாகவும், மனுதாரருக்கும் எக்கோ நிறுவனத்துக்கும் இடையேயான காப்புரிமை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இளையராஜா தொடர்ந்த வழக்கில் வனிதா விஜயகுமார் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in