பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை ‘சினிமா செட்டிங்’ திட்டம்: தமிழக பாஜக பட்டியலிடும் ‘பாதகங்கள்’

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை ‘சினிமா செட்டிங்’ திட்டம்: தமிழக பாஜக பட்டியலிடும் ‘பாதகங்கள்’
Updated on
2 min read

சென்னை: “உடல்நல, கல்விசார் சிக்கல்கள் ஏற்படுத்தக் கூடிய ‘ப’ வடிவ இருக்கை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வகுப்பறைகளைக் கட்டுவதிலும், ஆசிரியர்களை நியமிப்பதிலும், மாணவர்களின் அடிப்படைக் கற்றல் திறனை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தாமல், திரைப்படக் காட்சிகளைப் பார்த்து நிர்வாக முடிவுகளை எடுப்பது தீவிரமான கண்டனத்திற்குரியது” என பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “திராவிட மாடல் அரசின் பள்ளிக் கல்வித் துறை, மாணவர்களின் எதிர்காலத்தையும், ஆரோக்கியத்தையும் கருத்தில் கொள்ளாமல், திரைப்படக் காட்சிகளைப் பார்த்து நிர்வாக முடிவுகளை எடுப்பது தீவிரமான கண்டனத்துக்குரியது. சமீபத்தில், பள்ளிகளில் மாணவர்கள் இனி ‘ப’ வடிவத்தில் அமர வேண்டும் என்று ஒரு விசித்திரமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

'சிறு கறையை நீக்கப் போய், துணியையே பாழாக்கியது போல', இந்த அரசின் செயல் அமைந்துள்ளது. ஒரு சிறிய சிக்கலைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு, அதனால் ஏற்படப்போகும் பெரும் பாதிப்புகளை யோசிக்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், ‘நோயை விட மருந்து கொடியது’ என்பது போல, இந்த புதிய இருக்கை முறை மாணவர்களுக்கு நன்மையை விட, வாழ்நாள் பாதிப்புகளையே பரிசளிக்கும்.

உடல்நல மற்றும் கல்விசார் சிக்கல்கள்: கழுத்து மற்றும் தோள்பட்டை வலி: 'ப' வடிவ அமைப்பின் பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் மாணவர்கள், கரும்பலகையைப் பார்க்க வேண்டுமானால், நாள் முழுவதும் தங்கள் கழுத்தையும், தோள்பட்டையையும் ஒரே பக்கமாகத் திருப்பி வைத்திருக்க வேண்டும்..இது அந்தப் பிஞ்சு உடல்களுக்கு எவ்வளவு பெரிய சுமை! இந்த தொடர்ச்சியான அழுத்தம், கடுமையான கழுத்து வலி, தோள்பட்டை வலியோடு நின்றுவிடாமல், எதிர்காலத்தில் குணப்படுத்தக் கடினமான 'செர்விக்கல்' (Cervical Spondylitis) போன்ற தீவிரமான தண்டுவடப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.

கண்ணாடி அணியும் மாணவர்களுக்குக் கூடுதல் பாதிப்பு: கண்ணாடி அணியும் மாணவர்கள், இப்படி பக்கவாட்டில் திரும்பும்போது, கண்ணாடியின் மையப் பகுதியில் (Optic Centre) பார்க்காமல், அதன் ஓரப் பகுதியின் வழியே பார்க்க நேரிடும்.இது அவர்களின் கண்களுக்குக் கூடுதல் அழுத்தத்தைக் (Eye Strain) கொடுத்து, பார்வைத்
திறனை மேலும் பாதிக்கும், கடுமையான தலைவலியை உருவாக்கும்.

ஆசிரியர் - மாணவர் தொடர்பு பாதிப்பு: இந்த முறையில் ஆசிரியரால் அனைத்து மாணவர்களுடன் நேரடிப் பார்வையை (Eye Contact) நிலைநிறுத்த முடியாது. இது கற்றல்-கற்பித்தல் செயல்பாட்டில் மிகப்பெரிய தடையாகும்.

சினிமா மோகமும், திறனற்ற நிர்வாகமும்: 2006-ல் இலங்கையில் இதே போன்ற இருக்கை முறையைப் பின்பற்றியபோது, மாணவர்கள் தங்கள் தலையை சராசரியாக 30.71 டிகிரி திருப்ப வேண்டியிருந்தது. என்றும், கிட்டத்தட்ட 23% மாணவர்கள் 45 டிகிரிக்கு மேல் தலையைத் திருப்பியதால், உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளானார்கள் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

இதையெல்லாம் அறியாமல், மலையாள திரைப்படமான ‘Sthanarthi Sreekuttan’ என்ற படத்தில் வரும் காட்சியைப் பார்த்து ஈர்க்கப்பட்டு இந்த உத்தரவைப் பிறப்பித்திருப்பது வெட்கக்கேடானது. உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் தலைவராக இருக்கும் அன்பில் மகேஸ் கல்வி அமைச்சரானால், இப்படித்தான் சினிமா காட்சிகளை காப்பியடித்து நிர்வாகம் செய்வார் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.

அமைச்சர் கவனம் செலுத்த வேண்டிய அவசரப் பிரச்சினைகள்: சினிமா பார்த்து வெற்று விளம்பரத் திட்டங்களை அறிவிப்பதை விடுத்து, அமைச்சர் அன்பில் மகேஸ் பள்ளிக் கல்வித் துறையில் புரையோடிப் போயிருக்கும் உண்மையான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

அரசின் சி.ஏ.ஜி (CAG) மற்றும் தேசிய அடைவு கணக்கெடுப்பு (NAS) அறிக்கைகள் சுட்டிக்காட்டும் சில அவலங்கள் இதோ: மாநிலம் முழுவதும் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறை. மாணவர்கள் மரத்தடியிலும், ஆய்வகங்களிலும் அமர்ந்து படிக்கும் அவலம். அரசுப் பள்ளிகளில் 18,862 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் (15.87%) உள்ளன. தமிழக அரசின் கல்விக் கொள்கைப்படி, ஒவ்வொரு 5 கி.மீ-க்கு ஒரு உயர்நிலைப் பள்ளியும், 8 கி.மீ-க்கு ஒரு மேல்நிலைப் பள்ளியும் இருக்க வேண்டும்.

ஆனால், 2,133 குடியிருப்புகளுக்கு அருகில் உயர்நிலைப் பள்ளிகளும், 1,926 குடியிருப்புகளுக்கு அருகில் மேல்நிலைப் பள்ளிகளும் இல்லை என்ற அவலநிலை நீடிக்கிறது. ஆய்வு செய்யப்பட்ட 108 பள்ளிகளில் 38 பள்ளிகளுக்கு சுற்றுச்சுவரே இல்லை அல்லது சேதமடைந்துள்ளது. 20%க்கும் அதிகமான மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு முறையான அறிவியல் செய்முறைப் பயிற்சி கிடைப்பதே இல்லை.

கற்றல் திறன் குறைபாடு (NAS அறிக்கை 2021): இந்த அறிக்கை தமிழகப் பள்ளிகளின் மோசமான நிலையைக் காட்டுவதால், எந்த ஊடகத்திலும் இதுபற்றிப் பேசப்படவில்லை. 10 ஆம் வகுப்பு மாணவர்களில், அறிவியலில் 2% மாணவர்கள் மட்டுமே திறமையானவர்களாக உள்ளனர். கணிதம் மற்றும் அறிவியலில் வெறும் 8% மாணவர்களே கற்றல் இலக்குகளை அடைந்துள்ளனர்.

8 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எண்களைப் பகுத்தறிதல், வரைப்படத்தில் முக்கிய இடங்களைக் கண்டறிதல் போன்ற அன்றாட வாழ்க்கைக்கான அடிப்படைத் திறன்கள் கூட இல்லை என்று இந்த ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது.

இத்தனை ஆயிரம் பிரச்சனைகள் தலைக்கு மேல் கத்தியாய்த் தொங்கும்போது, இவை அனைத்தையும் புறக்கணித்துவிட்டு, மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் சினிமா செட்டிங் போன்ற திட்டங்களை முன்னெடுப்பது யாரை ஏமாற்ற?

எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த 'ப' வடிவ இருக்கை உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும். தேவையற்ற, ஆபத்தான திட்டங்களைக் கைவிட்டுவிட்டு, வகுப்பறைகளைக் கட்டுவதிலும், ஆசிரியர்களை நியமிப்பதிலும், மாணவர்களின் அடிப்படைக் கற்றல் திறனை மேம்படுத்துவதிலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கவனம் செலுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று எஸ்.ஜி.சூர்யா கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in