

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 14-ம் தேதி மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் 2026 தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. திமுக கூட்டணி எந்த மாற்றமுமின்றி இயங்கி வருகிறது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இப்போதும் பாஜக கூட்டணியில் இருப்பதாகக் கூறி வருகிறார். அதிமுகவுடன் இணையும் அவரது முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
இதற்கிடையே, அதிமுகவுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைவது தொடர்பான கேள்விக்கு, அது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் என மத்திய அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதனால் பன்னீர்செல்வத்தை அதிமுகவில் இணைக்க பாஜகவும் ஆர்வம் காட்டவில்லை என தெரிகிறது.
அதிமுகவுடன் இணைப்பு சாத்தியமாகாத நிலையில், தம்மை எப்படி வலுப்படுத்திக் கொள்வது என்பது தொடர்பாகவும், பாஜக கூட்டணியில் நீடிப்பதா, விலகுவதா என முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திலும் பன்னீர்செல்வம் உள்ளார். இதுதொடர்பாக ஜூலை 14-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளார்.
மாவட்டச் செயலாளர்கள் சிலர், தவெகவுடன் கூட்டணி அமைக்க பன்னீர்செல்வத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதனால் இந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓபிஎஸ் முக்கிய முடிவுகள் எடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.