

சென்னை: நம்நாட்டின் 100-வது சுதந்திர தினத்தின் போது பொருளாதாரம், தொழில்நுட்பத்தில் நாம் தன்னிறைவு பெற்றிருப்போம். அதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியமானது என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் தெரிவித்தார். சென்னை ஐஐடியின் 62-வது பட்டமளிப்பு விழா நேற்று ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி தலைமையில் நடைபெற்றது.
இதில் முதன்மை விருந்தினராக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், சிறப்பு விருந்தினராக பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் 529 பிஎச்டி உட்பட மொத்தம் 3,227 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
இதுதவிர கல்வி மற்றும் இதர செயல்பாடுகளில் சிறந்து விளங்கியதற்காக இந்திய குடியரசு தலைவர் விருது மற்றும் பாரத் ரத்னா விஸ்வேஸ்வரய்யா நினைவு விருது ஆகியவை மாணவர் பி.எஸ்.அனிரூத்துக்கும், டாக்டர் சங்கர் தயாள் சர்மா விருது மாணவர்ஆர்.அபினவுக்கும், ஆளுநர் விருது ராஜகோபால் சுப்ரமணியத்துக்கும் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு விருதுகளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து விழாவில் அஜித் தோவல் பேசியதாவது: வாய்ப்புகளை பயன்படுத்தி இந்த சமூகத்துக்காக மாணவர்கள் பணியாற்ற வேண்டும். நாட்டின் 100-வது சுதந்திர தினம் கொண்டாட இன்னும் 22 ஆண்டுகள் இருக்கின்றன.
அந்த காலக்கட்டத்தில் நீங்கள் சிறந்த அனுபவமும், சிறந்த அறிவும், பொருளாதாரத்தில் தன்னிறைவையும் பெற்றிருப்பீர்கள். 100-வது சுதந்திர தினத்தின்போது, நாட்டின் ஜிடிபி 33 டிரில்லியன் டாலராக இருக்கும். அப்போது நம்மைவிட சீனா 22 சதவீதம் குறைவாக இருக்கும். நாம்தான் உலகின் மிகப்பெரிய ராணுவ படையையும் வைத்திருப்போம்.
தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் வளர்ச்சி கண்டு வருகிறது. அதற்கேற்ப நமது உள்நாட்டு தொழில்நுட்ப வளர்ச்சிகளை மேம்படுத்தி வருகிறோம். அதில் அதிகமாக நாம் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்நாட்டு தொழில்நுட்பத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளதை நினைத்து பெருமைப்படுகிறோம். பிரம்மோஸ் மற்றும் வான்தடுப்பு பாதுகாப்பு, தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவை மிகவும் சிறப்பாக செயல்பட்டன. பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை மட்டுமே இலக்காக கொண்டு நாம் தாக்குதல் நடத்தினோம்.
பாகிஸ்தான் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை 23 நிமிடங்களில் முடித்துவிட்டோம். பாகிஸ்தான் உட்பட வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியா மீது பாகிஸ்தான் பாதிப்புகள் ஏற்படுத்தியதாக தவறாக செய்திகள் வெளியிட்டன. இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டது போன்ற ஒரு படத்தை அவர்களால் ஆதாரமாக வெளியிட முடியுமா. நாம், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய தாக்குதலுக்கான ஆதாரங்களை சேகரித்துள்ளோம். பாகிஸ்தான் விமானபடைத்தளம் மீது நாம் நடத்திய தாக்குதல் சரிசெய்யப்படவில்லை. அதுவே சான்று.
மாணவர்கள் அனைவரும் நாட்டுக்காக சேவையாற்ற வேண்டும். பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பத்தில் நாட்டை மேம்படுத்த மாணவர்களின் பங்களிப்பு முக்கியம். அடுத்த ஆண்டு, உலகின் வளர்ந்து வரும் பொருளாதார வலுமிக்க நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடிக்கும். இவ்வாறு பேசினார்.
விழா முடிந்த பின்னர் சென்னை ஐஐடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய அறிவுசார் மையத்தையும் அஜித் தோவல் தொடங்கி வைத்தார். இந்தியாவின் கலாச்சாரம் சார்ந்த மொழி, மானுடம், இந்திய தத்துவங்கள் உள்ளிட்டவற்றை இந்த மையம் ஆய்வு செய்யவுள்ளது.