

“திராவிட கட்சிகளுக்கு மாற்றான அணியை உருவாக்கும் முயற் சியில் தமிழர் தேசிய முன்னணி ஈடுபடும்” என்று அக்கட்சி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
திருநெல்வேலி, கன்னியா குமரி, தூத்துக்குடி மாவட்ட தமிழர் தேசிய முன்னணி அமைப்பு குழுவை உருவாக்க, திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
இலங்கை இனப்பிரச்சினையில் முந்தைய காங்கிரஸ் அரசு தமிழர்களை பலி கொடுத்து சிங்களர்களை சமரசப்படுத்தியது. அதையே இப்போதைய அரசும் செய்து வருகிறது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மா னங்கள், பிரதமருக்கு கடிதங்கள் என்ற நிலைப்பாட்டுடன் தமிழக முதல்வர் நிறுத்திவிடக் கூடாது. இலங்கை தமிழர்களுக்கு உதவ, மத்திய அரசை அவர் நிர்ப்பந்திக்க வேண்டும்.
மக்களவையிலும், மாநிலங் களவையிலும் பிற கட்சிகளுடன் இணைந்து இலங்கை தமிழர் களுக்காக குரல் கொடுக்க வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தால் கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக படுதோல்வி அடைந்தன.
உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு களை கடந்த 8 ஆண்டுகளாக நடத்தவில்லை. முந்தைய திமுக அரசு செம்மொழி மாநாடு என்ற பெயரில் போட்டி மாநாட்டை நடத்தியது. தற்போது உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் செயலற்று உள்ளது. அந்நிறுவனத்தை ஊக்குவிக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது.
திராவிட கட்சிகளுக்கு மாற்றான அணியை உருவாக்கும் முயற்சியில் தமிழர் தேசிய முன்னணி ஈடுபடும். தேர்தலில் போட்டி என்பது குறித்து அப்போது முடிவு செய்யப்படும். தமிழகத்தில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழலை எதிர்த்தும், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை தடுக்கவும் தமிழர் தேசிய முன்னணி போராட்டங்களை நடத்தும் என்றார் பழ.நெடுமாறன்.