திறந்தநிலை பல்கலை. பேராசிரியர்கள் இடமாற்ற முடிவை கைவிட தினகரன் வலியுறுத்தல்

திறந்தநிலை பல்கலை. பேராசிரியர்கள் இடமாற்ற முடிவை கைவிட தினகரன் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்: "பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளுக்கு மாறாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்வதை கண்டித்து அப்பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடந்த 2 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே 60 சதவீதம் பேராசிரியர்கள் பற்றாக்குறையுடன் இயங்கி வரும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தில், தற்போது பணியில் இருக்கும் பேராசிரியர்களையும் மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் வகையில் தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்குநர் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை கடும் கண்டனத்துக்குரியது.

பாடப் புத்தகங்களை தயாரித்து விநியோகிப்பது, விடைத்தாள் திருத்துவது, ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டுவது என பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள பேராசியர்களை இடமாற்றம் செய்வது, அங்கு பயிலும் மாணவர்களின் கல்வித் திறனை பாதிப்பதோடு, வரும் காலங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து பல்கலைக்கழகத்தின் அங்கீகாரமும் ரத்தாக வாய்ப்பிருப்பதாக பேராசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆட்சிப் பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதல்வர் தொடங்கி பேராசிரியர் கள் வரை நிலவும் பல்லாயிரக்கணக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப எந்த வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசால் உயர்கல்வித் துறை அதள பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பேராசிரியர்களை மாற்றுக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யும் முடிவை உடனடியாக திமுக அரசு கைவிட வேண்டும். காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்” என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in