தமிழகத்துக்கு அவப்பெயரை தேடி தந்ததே திமுக அரசின் சாதனை: நயினார் நாகேந்திரன்

தமிழகத்துக்கு அவப்பெயரை தேடி தந்ததே திமுக அரசின் சாதனை: நயினார் நாகேந்திரன்
Updated on
1 min read

சென்னை: “தமிழகத்துக்கு அவப்பெயரை தேடி தந்ததுதான் திமுக அரசின் நான்கு ஆண்டு கால சாதனை” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மது போதையினால் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், வள்ளியூர் அருகே தனியாக வீட்டில் இருந்த 71 வயது மூதாட்டி ஒருவர் நகைக்காக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.

திமுக ஆட்சியில் குழந்தைகள் முதல் முதியோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை என்பதை இவ்விரு செய்திகளும் நமக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளன. ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பையும் மக்களின் நல்வாழ்வையும் உறுதி செய்ய முடியாதது மட்டுமன்றி, வரலாறு காணாத அவப்பெயரை தமிழகத்துக்கு தேடித் தந்தது தான் ஆளும் திமுக அரசின் நான்கு ஆண்டு கால சாதனை.

ஆளத் தெரியாதவர்கள் கைகளில் சிக்கியுள்ள நமது தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். பஞ்சமில்லாமல் எங்கும் போதைப் பொருட்கள் கிடைக்கின்றன. காவல் துறையினர் திமுக-வின் கூலிப்படைகள் போல செயல்படுகின்றனர். இந்த லட்சணத்தில் அடுத்த தேர்தலிலும் மக்கள் நம்மை ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி அழகு பார்ப்பார்கள் என பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஆனால், திமுக ஆட்சியில் நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தில் வாழும் தமிழக மக்கள், அடுத்த சட்டப் பேரவைத் தேர்தல் எப்போது வரும், இந்த அலங்கோல ஆட்சியை அரியணையிலிருந்து எப்போது அகற்றலாம் என்று காத்துக் கொண்டிருக் கிறார்கள்” என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in