பணி நெருக்கடியால் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை; காரணமானவர்கள் மீது நடவடிக்கை தேவை: அன்புமணி

பணி நெருக்கடியால் சத்துணவு அமைப்பாளர் தற்கொலை; காரணமானவர்கள் மீது நடவடிக்கை தேவை: அன்புமணி
Updated on
1 min read

சென்னை: “வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை அரசு நிதியுதவி பெறும் பள்ளிசத்துணவு அமைப்பாளர் தற்கொலைக்கு காரணமான அதிகாரிகளை காப்பாற்ற அரசே முயல்வதா என்றும், அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.” என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்த பாரிஜாதம் என்பவர் சில நாள்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்கொலை செய்து கொண்ட பாரிஜாதம் நேர்மையானவர்; துணிச்சலானவர் என்று கூறப்படுகிறது. அவர் மேலும் பள்ளிகளிலும் சத்துணவு அமைப்பாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்துள்ளார். பணி தொடர்பாக தம்மை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வந்த 3 அதிகாரிகளும், ஓர் ஆசிரியரும் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அதை தாங்கிக்கொள்ள முடியாமல் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவரே மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார்.

ஆனாலும் கூட பாரிஜாதத்தை தற்கொலைக்கு தூண்டிய அதிகாரிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் தான் அரசும், காவல்துறையும் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதை ஏற்க முடியாது. இந்த சிக்கலில் அரசும், காவல்துறையும் இனியும் தாமதிக்காமல் பாரிஜாதத்தின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். பாரிஜாதத்தின் குடும்பத்துக்கு இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in