Last Updated : 26 Jul, 2018 07:50 AM

 

Published : 26 Jul 2018 07:50 AM
Last Updated : 26 Jul 2018 07:50 AM

வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்பவர்களின் பெயர் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படும்; தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமும் அவர்கள் பெயரை அறிய முடியாது: வருமானவரித் துறை அதிகாரிகள் தகவல்

வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்பவர்களின் பெயர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றங்கள் மூலம் கூட தகவல் அளிப்பவரின் பெயரை பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ளிட்ட யாரும் பெற முடியாது. அந்த அளவுக்கு தகவல் அளிப் பவரின் பெயர் பரம ரகசியமாக பாதுகாக்கப்படும் என வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, கணக்கில் காட்டப்படாத வருமானம், சொத்துகள் மற்றும் வரி ஏய்ப்பு விவரங்கள் பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கப்படுகிறது. இந்தப் பரிசுத் தொகையை மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த ஜூன் 1-ம் தேதி, ரூ.5 கோடி வரை உயர்த்தியது. அதுபோல், பினாமி சொத்துகள் பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.1 கோடி வரை பரிசு வழங்கப்படும்.

இந்தப் பரிசுத் தொகையை பெற உரிய ஆவணங்களுடன் உறுதியான தகவல்களை அளிக்க வேண்டும். தகவல் அளிப்பவர் தனிநபராகவோ அல்லது ஒரு குழுவாகவோ இருக்கலாம். ரூ.5 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கான வரி ஏய்ப்பு பற்றி துல்லியமான தகவல்களை அளிக்க வேண்டும்.

இத்தகைய வரி ஏய்ப்பு அல்லது கறுப்புப் பணம் பற்றி தகவல் தெரிவிக்க வருமான வரி (புலனாய்வு) தலைமை இயக்குநரை அணுக வேண்டும். அங்கு தரப்படும் படிவத்தை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் அளிக்க வேண்டும். ரூ.1 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட அசையும் அல்லது அசையா பினாமி சொத்துகள் பற்றியும் தகவல் அளிக்கலாம்.

பினாமி சொத்து பற்றி தகவல் அளிப்போர், வருமான வரி இணை ஆணையரை அணுக வேண்டும்.

தகவல் அளிப்பவர்கள், தங்களது தந்தை பெயர், முகவரி, ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் கருப்பு பண விவரம், கருப்பு பண பேர்வழிகள் விவரம், சொத்துகளின் முகவரி உள்ளிட்ட தகவல்களை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் தற்போது சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல் மற்றும் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, நீதிமன்றமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், மத்திய அரசின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நிலையில், இவ்வாறு வரி ஏய்ப்பு செய்பவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு அவர் களுடைய பெயர்கள் வருமானவரி துறை எந்த அளவுக்கு ரகசியமாக பாதுகாத்து வைக்கிறது, அவர் களது உயிர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்கப்படுகிறது, யார், யாரெல்லாம் தகவல் தெரிவிக்கலாம் என பல்வேறு சந்தேகங்கள் குறித்து வருமான வரித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அவர்கள் கூறியதாவது:

ஒருவர் சட்டவிரோதமான முறையில் வருமானத்துக்கு அதிக மாக சொத்து சேர்த்து, அவர் வரி ஏய்ப்பில் ஈடுபட நேர்ந்தால் அது குறித்து தகவல் அறிந்தவர்கள் வருமானவரித் துறையிடம் தாராளமாக தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு தகவல்கள் அளிப்பவர்களை இருவகையாகப் பிரித்துள்ளோம்.

இதன்படி, பரிசுத் தொகை பெறும் நோக்கில் தகவல் அளிப்பவர்கள் மற்றும் நாட்டு நலன் கருதி தகவல் அளிப்பவர்கள் என இருவகைப் படுத்தியுள்ளோம்.

பரிசு பெற வேண்டும் என்ற நோக்கில் தகவல் அளிப்பவர்கள், அது சம்பந்தமாக ஏதேனும் உறுதியான தகவல்கள் தங்களிடம் இருந்தால் வருமானவரித் துறையிடம் அளிக்கலாம். அதற்கு முன்பாக, தகவல் அளிக்கும் நபர் தன்னைப் பற்றிய நம்பகத் தன்மையை வருமானவரித் துறையிடம் ஏற்படுத்த வேண்டும். அவர் மீது வருமானவரித் துறைக்கு நம்பிக்கை ஏற்பட்ட உடன் தகவல் தரும் நபருக்கு ஒரு சங்கேத குறியீட்டு எண் வழங்கப்படும். அந்த எண்ணைப் பயன்படுத்தி அவர்களிடம் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளப்படும்.

அவர் அளிக்கும் தகவல் குறித்து நாங்கள் மேற்கொள்ளும் விசாரணையில் உண்மை என தெரிய வந்த பிறகு தகவல் அளிக்கப்பட்ட நபருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும். அவ்வாறு பரிசு வழங்கப்பட்ட நபர்களின் பெயர்கள் பரம ரகசியமாக எங்கள் அலுவலகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும். அவரைப் பற்றிய விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிவிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றங்கள் மூலம் கூட தகவல் அளிப்பவரின் பெயரை பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ளிட்ட யாரும் பெற முடியாது.

அதேசமயம், சிலர் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி, பணம் பறிக்கும் நோக்கம் உள்ளிட்ட காரணங்களால், ஒருவர் மீது வரி ஏய்ப்பு குறித்து பொய் புகார் செய்ய முடியாது. அவ்வாறு புகார் செய்து கண்டுபிடிக்கும் பட்சத்தில் புகார் அல்லது தகவல் தெரிவித்தவர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சிலர் பரிசு பெறும் எண்ணம் இல்லாமல், அதேசமயம் நாட்டின் நலன் கருதி ஒருவர் செய்யும் வரி ஏய்ப்பு குறித்து ரகசிய கடிதம் மூலம் தகவல் அளிக்கலாம். அக்கடிதத்தில் அவர் தன்னுடைய பெயர் உள்ளிட்ட எவ்வித விவரங்களையும் தெரிவிக் கத் தேவையில்லை. எனவே, யாராவது வரி ஏய்ப்பு செய்தால், அதுகுறித்து உறுதியான தகவல்கள் தங்களிடம் வைத்திருக்கும் நபர்கள் அதுகுறித்து வருமானவரித் துறை யினரிடம் தாராளமாக தெரிவிக்க லாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x