தென் மாவட்டங்களின் 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10 முதல் அரசு பஸ்களை அனுமதிக்க கூடாது: ஐகோர்ட்

தென் மாவட்டங்களின் 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10 முதல் அரசு பஸ்களை அனுமதிக்க கூடாது: ஐகோர்ட்
Updated on
1 min read

சென்னை: தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ம் தேதி முதல் அரசு பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை - கன்னியாகுமரி டோல்வே பிரைவேட் லிமிடெட், கன்னியாகுமரி - எட்டுரவட்டம் டோல்வே பிரைவேட் லிமிடெட், சாலைப்புதூர் - மதுரை டோல்வே பிரைவேட் லிமிடெட் மற்றும் நாங்குநேரி - கன்னியாகுமரி டோல்வே பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்குகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தங்கள் நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை நீண்ட நாட்களாக செலுத்தாமல் உள்ளதாகவும், நிலுவைத் தொகை ரூ.276 கோடியை இன்னும் செலுத்தாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள் பேருந்துகளை நிறுத்தி கட்டணம் வசூலிக்க முடியாத சூழல் உள்ளதாகவும், இது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், போக்குவரத்துக் கழகங்கள், நிலுவைத் தொகையைத் தீர்க்காமல், பிரச்சினையை நீட்டித்துக்கொண்டே இருந்தால், நிலுவை தொகை ரூ.300 கோடி முதல் 400 கோடிக்கு மேல் உயர்ந்துவிடும் என தெரிவித்தார்.

அரசு அதிகாரிகள் இந்தப் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு விரைவாகச் செயல்படவில்லை என்றும், சுங்கச்சாவடிகளில் பேருந்துகளை நிறுத்தி தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால், அவர்களால் அதைச் செய்ய முடியாமல் போகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போக்குவரத்து கழகங்களின் இந்த நடவடிக்கையால், பொது மக்கள் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்ட நீதிபதி, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுராவட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச் சாவடிகள் வழியாக ஜூலை 10 முதல் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த சுங்கச்சாவடிகளில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in