

சென்னை: ‘தமிழகம் முழுவதும் மாணவர் விடுதிகள் முறையாக பராமரிப்பின்றி இருக்கும் நிலையில், விளம்பர ஆசைக்காக அவற்றின் பெயரை முதல்வர் மாற்றியுள்ளார்’ என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று என்றழைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை வரவேற்றும், விமர்சித்தும் அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியிருப்பதாவது:
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகள் முறையான பராமரிப்பின்றி, தரமான குடிநீர், சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி, பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் உள்ளன. கடந்த ஆண்டில் கூட பழநி அருகே ஆயக்குடி மாணவர் நல விடுதி மேற்கூரை இடிந்து விழுந்து 5 மாணவிகள் காயமடைந்தனர். ஆனால் தனது விளம்பர ஆசைக்காக விடுதிகளின் பெயரை முதல்வர் மாற்றியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி: சமூக நீதி என்ற பெயரை திமுக அரசு பயன்படுத்துவதைவிட பெரிய கொடுமை இருக்க முடியாது. தமிழகத்தில் சமூகநீதியை ஒட்டுமொத்தமாக படுகொலை செய்து விட்டு, அதற்கு பரிகாரம் தேடும் வகையில் சமூகநீதி, சமூகநீதி... என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: சமூக நீதி என்றால் என்ன என்பதை முதலில் முதல்வர் விளக்கி விட்டு, பின்னர் அரசு விடுதிகளை சமூகநீதி விடுதிகள் என்று மாற்றி அழைக்கட்டும். சாதி ஒழிப்பு, சமூக நீதி எல்லாம் வெறும் சொல்லாடலாக மட்டுமே கடந்த 60 ஆண்டுகளாக இருந்து வருகின்றன. சமூக நீதி குறித்து பேசுபவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் என்ன பிரச்சினை?
பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்: பட்டியலின மக்களின் அடிப்படை வசதிகளுக்காக மத்திய அரசின் சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.1,560 கோடி நிதியை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு மடைமாற்றம் செய்ததுதான் திமுகவின் சமூக நீதியா தேர்தல் ஆதாயத்துக்காக வீண் விளம்பர அரசியல் செய்வதை முதல்வர் கைவிட வேண்டும்.
திருமாவளவன் வரவேற்பு: பெயர் மாற்றம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறும்போது, ‘‘தமிழகம் எங்கும் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய சமூகங்களை சார்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் பிசி, எஸ்சி, எஸ்டி விடுதிகள் என்று அழைக்கப்பட்ட நிலையில், அவற்றை ‘சமூக நீதி விடுதிகள்’ என பெயர் மாற்றம் செய்து முதல்வர் அறிவித்திருப்பதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.