ராமதாஸ் தலைமையில் காலையில் கூடும் பாமக செயற்குழுவை புறக்கணிக்க அன்புமணி முடிவு?

ராமதாஸ் | அன்புமணி | கோப்புப் படம்
ராமதாஸ் | அன்புமணி | கோப்புப் படம்
Updated on
2 min read

விழுப்புரம்: ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் பரபரப்பன சூழலில், விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக செயற்குழு நாளை (ஜூலை 8) காலை கூடுகிறது. இக்கூட்டத்துக்கு நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்தை அன்புமணி புறக்கக்கணிக்கக் கூடும் என தெரிகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதலால் பாமக பிளவுப் பட்டு உள்ளது. இரு கோஷ்டிகளாக நிர்வாகிகள் மற்றும் தொண்டனர் பிரிந்துள்ளனர். நீயா, நானா என பார்த்து விடுவோம் என்ற முடிவில் இருவரும் உள்ளனர். ராமதாஸும், அன்புமணியும் தங்களது எதிர் முகாமில் உள்ளவர்களை பரஸ்பரம் நீக்கி வருகின்றனர். இதன் உச்சமாக, பாமக கொறடா பொறுப்பில் இருந்து ராமதாஸ் ஆதரவு பெற்றவரான சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை நீக்குமாறு சட்டப்பேரவைத் தலைவரிடம் அன்புமணியின் கடிதத்தை அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் கொடுத்துள்ளனர்.

அடுத்த சில நிமிடங்களில், பாமக கொறடா பொறுப்பில் எம்எல்ஏ அருள் தொடருவதாக ராமதாஸ் வழங்கிய கடிதம் ஒப்படைக்கப்பட்டது. புதிய பொறுப்பில் நியமிக்கப்படும் நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் கடிதத்தின் நகலில் அன்புமணியின் பெயரை கடந்த 2 நாட்களாக ராமதாஸ் தவிர்த்து வருகிறார். மேலும், நிர்வாக குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் அன்புமணி நீக்கப்பட்டுள்ளார்.

தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அன்புமணிக்கு வழங்கப்பட்டுள்ள செயல் தலைவர் பதவியை பறிக்கவும் ராமதாஸ் திட்டமிட்டுள்ளார். அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு கூடி முடிவு செய்யும் என ராமதாஸ் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி நிர்வாக குழு கூட்டம் முடிவடைந்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் பாமக செயற்குழுக் கூட்டம் நாளை (ஜூலை 8) காலை கூடுகிறது.

இக்கூட்டத்தில் நிறுவனர் மற்றும் தலைவரான ராமதாஸ் தலைமை வகிக்க உள்ளார். இதில், மாவட்ட, மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்க அன்புமணிக்கும் அழைப்பு விடுக்கப்படும் என கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கடந்த 5-ம் தேதி தெரிவித்திருந்தார். அழைப்பு விடுக்கப்பட்ட தகவலை இரண்டு தரப்பும் உறுதி செய்யவில்லை. இதனால், செயற்குழுக் கூட்டத்தை அன்புமணியும், அவரது ஆதரவாளர்கள் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியாகி உள்ளன. இந்தக் கூட்டத்தை அன்புமணி புறக்கக்கணிக்கக் கூடும் என தெரிகிறது.

பாமக செயற்குழுவில், வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறவுள்ள மகளிர் மாநாடு தொடர்பாக ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் செயல் தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்குவதற்காக நடைபெறும் ஆயத்த கூட்டம் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

செயற்குழுக் கூட்டத்தில் ‘அச்சாரம்’ போட்டு, பொதுக்குழுவில் ‘செயல் வடிவம்’ கொடுக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளார் எனவும் குற்றஞ்சாட்டுகின்றனர். பரபரப்பான சூழலில் பாமகவின் செயற்குழு கூடுவதால், ஓமந்தூரில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in