Published : 07 Jul 2025 12:18 AM
Last Updated : 07 Jul 2025 12:18 AM

சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: ஒருவர் உயிரிழப்பு - நடந்தது என்ன?

சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் விண்ணைத் தொடும் அளவுக்கு எழுந்த புகை.

சாத்தூர்: ​விருதுநகர் மாவட்​டம் சாத்​தூர் அருகே பட்​டாசு ஆலை​யில் நேற்று காலை ஏற்​பட்ட பயங்கர வெடி​ விபத்​தில், ஆலையின் 16 அறைகள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் தொழிலாளி ஒரு​வர் உயி​ரிழந்​தார்.

சிவ​காசி அருகே திருத்​தங்​கலை சேர்ந்​தவர் கணேசன். இவருக்​கு சொந்​த​மான பட்​டாசு ஆலை சாத்​தூர் அருகே உள்ள கீழத்​தா​யில்​பட்​டி​யில் நாக்​பூர் மத்​திய வெடிபொருள் கட்​டுப்​பாட்​டு துறை​யின் உரிமம் பெற்று இயங்​கு​கிறது. இங்கு பேன்ஸி ரக பட்​டாசுகள் தயாரிக்​கப்​படு​கின்​றன. 50-க்​கும் மேற்​பட்ட அறை​களில் 150-க்​கும் மேற்​பட்ட தொழிலா​ளர்​கள் பணிபுரி​கின்​றனர். இவர்​களில் பலர் வெளி மாநிலத்​தினர். இவர்​கள் ஆலை வளாகத்​திலேயே தங்கி பணி​யாற்​றுகின்​றனர்.

விடு​முறை தின​மான நேற்​றும் இந்த ஆலை​யில் பட்​டாசு தயாரிக்​கும் பணி நடந்​தது. ஓர் அறை​யில் பேன்சி பட்டாசுகளுக்கான மருந்தை செலுத்​தும்​போது உராய்வு ஏற்​பட்டு திடீரென வெடி விபத்து ஏற்​பட்​டது. அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்ததில், 16 அறை​கள் வெடித்​து சிதறி தரைமட்​ட​மாகின. இந்த விபத்​தில் பனையடிப்​பட்​டியை சேர்ந்த பால​குரு​சாமி (47) உயி​ரிழந்​தார். தாயில்​பட்​டியை சேர்ந்த கண்​ணன் (50), ராஜசேகர் (29), படந்​தாலை சேர்ந்த ராஜ​பாண்டி (37), ஜார்க்​கண்ட் மாநிலத்​தை சேர்ந்த கமலேஷ்​ராம் (28), ராஜேஷ் (20) ஆகியோர் பலத்த காயமடைந்​தனர். வெம்​பக்​கோட்​டை, சாத்​தூர் தீயணைப்பு நிலைய வீரர்​கள் மீட்​பு பணி​யில் ஈடு​பட்​டனர்.

பால​குரு​சாமி​யின் உடல் மீட்​கப்​பட்டு பிரேதப் பரிசோதனைக்​காக சாத்​தூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டது. காயமடைந்த 5 பேரும் சிவ​காசி அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். இதில், கண்​ணனுக்கு தலை​யில் பலத்த காயம் ஏற்​பட்​ட​தால் தீவிர சிகிச்​சைக்​காக மதுரை அரசு மருத்​து​வமனைக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டார்.

சம்பவ இடத்​தில் போலீ​ஸார், வரு​வாய் துறை அதி​காரி​கள் ஆய்வு மேற்​கொண்​டனர். ஆலை உரிமை​யாளர் கணேசன், போர்​மேன் லோக​நாதன் உட்பட 4 பேர் மீது வெம்​பக்​கோட்டை போலீ​ஸார் வழக்​கு பதிவு செய்து லோக​நாதனை கைது செய்​தனர். மற்ற 3 பேரை​யும் தேடி வரு​கின்​றனர்.

முதல்வர் ரூ.4 லட்​சம் நிவாரணம்: முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: சாத்​தூர் அருகே நடந்த பட்​டாசு ஆலை வெடி விபத்​தில் உயி​ரிழந்​தவரின் குடும்​பத்​தினருக்​கும், அவரது உறவினர்​களுக்​கும் ஆழ்ந்த இரங்​கலை​யும், ஆறு​தலை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன். உயி​ரிழந்​தவரின் குடும்​பத்​தினருக்கு ரூ.4 லட்​ச​மும், பலத்த காயமடைந்து மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.1 லட்​ச​மும், லேசான காயமடைந்து மருத்​து​வனை​யில் சிகிச்சை பெற்று வருபவர்​களுக்கு தலா ரூ.50 ஆயிர​மும் முதல்​வரின் பொது நிவாரண நிதியில் இருந்​து வழங்​க உத்​தர​விட்​டுள்​ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x