Last Updated : 06 Jul, 2025 07:40 PM

4  

Published : 06 Jul 2025 07:40 PM
Last Updated : 06 Jul 2025 07:40 PM

''ரத்தத்தின் ரத்தமே வா! மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்!'' - தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்

சென்னை: மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் எனும் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை நாளை (திங்கள் கிழமை) தொடங்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ரத்தத்தின் ரத்தமே வா என அழைத்து தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடித விவரம்: எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தங்களே, அம்மாவின் உயிருக்கு உயிரான விசுவாசிகளே, எனது உணர்வுகளில் கலந்திருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் மக்கள் இயக்கத்தின் இரண்டு கோடிக்கும் அதிகமான தொண்டர்களே, உங்கள் அனைவருக்கும் எனது இதயத்திலிருந்து ஊற்றெடுக்கும் அன்பார்ந்த வணக்கம்!

எனது ஆழ்மனதில் உங்கள் அனைவரோடும் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். நானும் நீங்களும் நினைப்பது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது என்னவென்றால் ‘இன்னும் 100 ஆண்டு காலம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற மாபெரும் இயக்கம், மக்கள் தொண்டாற்ற நீடித்து நிலைத்து இருக்க வேண்டும். அதன்மூலம் தமிழக மக்கள் வாழ்வாங்கு வாழ்ந்து, செம்மாந்து திகழ்ந்து சிறப்பு எய்திட வேண்டும்’ என்பதே எனது லட்சிய முழக்கமாகும். இக்கடிதத்தின் வாயிலாக எனது மனதில் உள்ள இன்னும் சில முக்கியமான கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

எம்.ஜி.ஆரை தெய்வமாக மதிக்கும் மக்களால் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம்தான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். கழகம்தான் எனது மூச்சு – பேச்சு – சிந்தனை – செயல் – எண்ணம் - வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.

என்னுடைய நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் அம்மாவிடம் கற்றுக்கொண்ட பாடம்தான். இதுதான் என்னுடைய அரசியல் பாதையின் முகவரி. நானும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் வெவ்வேறு அல்ல. இரண்டு கோடிக்கும் அதிகமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ரத்தத்தின் ரத்தமாகத் திகழும் நீங்கள் எல்லோரும் என்னுடைய உயிரோடும், உணர்வோடும் கலந்திட்ட ரத்த உறவுகள். எப்போதும் நான் சிந்திப்பதெல்லாம் தமிழகத்தின் நலனைக் காக்க, நமது கழகம் தமிழ் நாட்டில் அணையா விளக்காகத் திகழ்ந்து, அறியாமை இருளை அகற்றி, மக்களுக்கு வெளிச்சத்தைத் தந்து, தமிழகத்தை ஒளிவீசச் செய்ய வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய தீராத ஆசை.

நான் கழகத்தின் பொதுச் செயலாளர்தான். எனினும், நான் தொண்டர்களாகிய உங்களோடு உங்களாக இருந்து தொண்டாற்றும் தலைமைச் சேவகன்தான். நீங்கள் எல்லோரும் எனக்குள்ளே, உயிரோடு கலந்துவிட்ட உறவுகளாக, ஒட்டுமொத்த முழு பலமாக இருப்பவர்கள்.

‘மக்களைக் காப்போம்’ ‘தமிழகத்தை மீட்போம்’ என்கிற புரட்சிப் பயணத்தை உங்களின் முழு ஆதரவோடு எழுச்சிப் பயணமாக ஆரம்பித்திருக்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு கடைக்கோடித் தொண்டனையும், இந்தப் பயணத்தில் எனது இதயத்தோடும் எண்ணத்தோடும் இணைந்து பயணிக்க அழைக்கின்றேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை மீண்டும் தமிழகத்தின் அரியணையில் ஏற்றிவைக்கத் துடிக்கும் உங்கள் உயிர்த் துடிப்பை நான் அறிவேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொற்காலத்தை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்திட நீங்கள் ஒவ்வொருவரும் உறுதிபூண்டிருப்பதை எனது உள்ளம் அறியும்.

`அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியே எனது வெற்றி’ என செயலாற்றுகிற உங்களின் எண்ணவோட்டத்தையும் நான் அறிவேன்.

தமிழ் நாட்டு அரசியல் வரலாற்றில் 31 ஆண்டுகளுக்கும் மேலாக ஆளும்கட்சியாக இருந்த வரலாறு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மட்டும்தான் உண்டு. தமிழ் நாட்டின் மக்களால் ஒரு கட்சியும், ஒரு தலைவனும் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், அது எம்.ஜி.ஆர். மட்டும்தான்.

எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பிறகு கழகத்தின் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இரண்டாவது அத்தியாயமாகத் தொடங்கி, ஒரு சகாப்தமாக, மக்கள் செல்வாக்கோடு பீடுநடை போட்டார்கள். அம்மா அவர்களைத் தொடர்ந்து ஆளுங்கட்சியாகவும், பிறகு எதிர்க்கட்சியாகவும் மக்கள் செல்வாக்கோடு, அரசியல் களத்தில் இருந்து அகற்ற முடியாத மாபெரும் சக்தியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறது.

பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து கழகத்தை வழி நடத்திடும் வாய்ப்பை, கடைக்கோடித் தொண்டனாக இருந்திட்ட எனக்கு காலம் வழங்கியிருக்கிறது. இதை எண்ணி எண்ணி, தினமும் போற்றி பாதுகாத்து மதித்து, நாளும் பொழுதும் பாராமல் இந்த இயக்கத்திற்காகவும், மக்களுக்காகவும் உழைக்கிறேன். ஆகவேதான், உங்களையும் என்னோடு இணைந்து உழைத்திட இந்த எழுச்சிப் பயணத்திற்கு அழைக்கிறேன்.

தமிழ் நாட்டு மக்களிடம் பொய் வாக்குறுதி கொடுத்து, மக்கள் விரோதப் போக்கைக் கடைபிடிக்கும், விளம்பர மாடல் விடியா ஆட்சி நடத்தும் கட்சியால் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.

மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

விடியா மாடல் ஆட்சியில் நடக்கிற ‘கமிஷன் - கலெக்ஷன் - கரப்ஷன்’ ஆகியவை மக்களைக் கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்காத ‘அப்பா’ ஸ்டாலினை, கோபத்தோடு அந்த இளைஞர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

சொன்ன வாக்குறுதிகளில் இன்னும் பெரும்பாலான வாக்குறுதிகளை ஸ்டாலின் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அதனால்தான், தமிழக மக்கள் கோபத்தில் கொந்தளித்துப்போய் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் சுயநல ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்.

கழகத்தின் உயிர்த் தொண்டர்களான உங்களை எல்லாம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான், ‘மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்’ என்கிற எனது இந்தப் புரட்சிப் பயணத்தில் நாம் எழுச்சியோடு சொல்ல வேண்டியது, தமிழ் நாட்டு மக்களுக்கு நாம் செய்த சேவைகளைத்தான், அதன்மூலம் தமிழ் நாடு அடைந்த பலன்களைத்தான்.

தமிழ் நாட்டு மக்களைக் காக்க உங்களில் ஒருவனாக முன்நின்று, முன்கள வீரனாக முன்னே செல்கிறேன். தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்காக இவ்வெற்றிப் பயணத்தில் என்னோடு இணைந்து ஈடு இணையற்ற சிப்பாய்களாக நீங்கள் வர வேண்டும். தமிழகத்தின் மூலைமுடுக்கெங்கும் நாம் எழுச்சியோடு செல்ல வேண்டும்.

நாம் செய்த சாதனைகளை உரக்கச் சொல்ல வேண்டும்; நாமே 2026-ல் உறுதியாக வெல்வோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைக்கும்.

அமைதியான தமிழ் நாடு !

வளமான தமிழ் நாடு!

நிறைவான தமிழ் நாடு!

இவைதான் நமது லட்சியம்!

நாம் வெல்வது நிச்சயம்!

ரத்தத்தின் ரத்தமே வா!

மக்களைக் காப்போம்,

தமிழகத்தை மீட்போம்!

தீய சக்தியை வதைத்திட,

நல்லாட்சியை விதைத்திட,

விலகாத இருள் விலகட்டும்!

தமிழகத்தில் அ.இ.அ.தி.மு.க ஆட்சி மலரட்டும்!

இதைத் தமிழகமே வாழ்த்தட்டும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x