Published : 06 Jul 2025 12:16 PM
Last Updated : 06 Jul 2025 12:16 PM

'ரிதன்யாவின் ஆடியோ சாட்சியங்களை யாராலும் உடைக்க முடியாது' - பொன்மாணிக்கவேல் நேரில் ஆறுதல்

திருப்பூர்: "ரிதன்யாவின் ஆடியோ சாட்சியங்களை யாராலும் உடைக்க முடியாது. சாட்சியத்தை விசாரித்தாலே ஒரு வாரத்தில் தண்டனை கொடுத்து விடலாம்" என முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

கணவன் குடும்பத்தார் கொடுமையால் அவிநாசியில் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் வீட்டுக்குச் சென்ற முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘எனக்கும் ரிதன்யாவின் குடும்பத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ரிதன்யா கடைசியாக அவரது தந்தைக்கு அனுப்பிய ஆடியோவை கேட்ட பின்பு தான் அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டுமென, தனிபட்ட முறையில் நான் இங்கு வந்துள்ளேன். ரிதன்யா இறப்புக்கு முன்பு அனுப்பிய ஆடியோ மிகவும் முக்கியமான சாட்சியாக உள்ளது.

ரிதன்யா தரப்பு வழக்குரைஞரிடம் பேசினேன். மேலும், முதல் தகவல் அறிக்கையும் படித்தேன். 194 பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ரிதன்யாவின் ஆடியோ சாட்சியங்களை எந்த கொம்பனாலும் உடைக்க முடியாது. மனரீதியாக, உடல் ரீதியாக யார், யார் துன்புறுத்தியுள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், ரிதன்யாவின் தொலைபேசி நீதிமன்றத்தில் முக்கிய சாட்சியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சாட்சியத்தை வைத்து விசாரித்தால் ஒரு வாரத்திலேயே தண்டனை கொடுத்து விடலாம். இதுவரை இந்த வழக்கை காவல் துணை கண்காணிப்பாளர் விசாரித்துக் கொண்டிருக்கிறார். பல இடங்களில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண்கள் இறக்கிறார்கள். ஆனால் ரிதன்யா திருமணமான 78 நாள்களிலேயே இறந்துள்ளார். அது அவர்கள் பெற்றோருக்கு பெரும் இழப்பாகும்.

இந்த வழக்கை மாவட்ட கண்காணிப்பாளர் நேரடியாக விசாரிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரடியாகவே பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை விசாரிக்கலாம். 10 ஆண்டுகளுக்கு முன்னாள் கடைப்பிடிக்கப்பட்டது போல, விசாரணையின் போது காகிதத்தில் எழுதாமல் ஆடியோ, வீடியோ முறையில் பதிவு செய்ய வேண்டும்.

திருப்புவனம் சம்பவத்தை நேரடியாக உயர் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். மேலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமலேயே விசாரணை நடைபெற்றுள்ளது. சிஎஸ்ஆர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x