தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக விலகல்!

தவெக ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தற்காலிகமாக விலகல்!
Updated on
1 min read

திமுக, அதிமுக, பாஜக தேர்தல் வியூகங்களை வகுக்க குழு வைத்திருப்பதை போல, தமிழக வெற்றிக் கழகமும் வியூக வகுப்பாளர்களை வைத்துள்ளது. ஏற்கனவே, விஜய்க்கு ஜான் ஆரோக்கிய சாமி, ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். மேலும், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் விஜய் கட்சிக்கு தேர்தல் உத்திகளை வகுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த பிப்ரவரியில் நடந்த தவெக 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரசாந்த் கிஷோர், "விஜய் ஒரு அரசியல் தலைவர் அல்ல. தமிழகத்தின் புதிய நம்பிக்கை. புதிய அரசியலை விரும்பும் கோடிக்கணக்கானோருக்கான இயக்கம் தவெக. மாற்றத்தை கொண்டு வரும் இலக்கை நிர்ணயிக்க நானும் சிறிதளவு உதவ இருக்கிறேன்" என்றார். அதன்படி, பிரசாந்த் கிஷோரின் சிம்ப்பிள் சென்ஸ் அனல்ட்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் பணியாளர்கள், தவெக உடன் இணைந்து 234 தொகுதிகளிலும் தேர்தல் உத்திகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிடுவதால், அவர் தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இதனால், விஜய் கட்சிக்கு ஆலோசனை வழங்குவதில் இருந்து தற்காலிகமாக பிரசாந்த் கிஷோர் விலகியுள்ளார். பிஹார் தேர்தல் முடிவடைந்து, நவம்பர் மாதத்துக்கு பிறகே மீண்டும் தவெக ஆலோசகராக செயல்படுவது குறித்து முடிவெடுப்பேன் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in