Published : 06 Jul 2025 12:32 AM
Last Updated : 06 Jul 2025 12:32 AM

மூத்த தமிழறிஞர் வா.மு.சேதுராமன் மறைவு: முதல்வர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி

தமிழறிஞர் வா.மு.சேதுராமன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

சென்னை: மூத்த தமிழறிஞர் வா.மு.சேது​ராமன் கால​மா​னார். அவருக்கு வயது 91. அவரது உடலுக்கு முதல்​வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலை​வர்​கள் அஞ்​சலி செலுத்​தினர். காவல் துறை மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

மூத்த தமிழறிஞர் பெருங்​கவிக்கோ வா.​மு.சேது​ராமன்​(91) உடல்​நலக்​குறைவு காரண​மாக சென்​னை​யில் நேற்று முன்​தினம் கால​மா​னார். ராம​நாத​புரம் மாவட்​டம், முதுகுளத்​தூர் அருகே ஆண்​ட​நாயகபுரத்​தில் 1935-ம் ஆண்டு பிறந்த சேது​ராமன், சென்னை பல்​கலைக்​கழகத்​தில் முனை​வர் பட்​டம் பெற்​றார். விரு​கம்​பாக்​கம் சின்​மயா நகரில் குடும்​பத்​துடன் வசித்து வந்​தார். அவருக்கு மகன்​கள் திரு​வள்ளுவர், க​வியரசன், ஆண்​டவர், தமிழ் மணி​கண்​டன், மகள் பூங்​கொடி உள்​ளனர்.

நெஞ்​சத்​தோட்​டம், ஐயப்​பன் பாமாலை, தமிழ் முழக்​கம், தாய்​மண், சேது காப்​பி​யம் உட்பட ஏராள​மான நூல்​களை எழு​தி​யுள்​ளார். ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட கவிதைகளை பதிப்​பித்​துள்​ளார். பன்​னாட்டு தமிழுறவு மன்​றத்​தின் நிறு​வன​ராக இருந்த இவருக்​கு, பெருங்​கவிக்​கோ, செந்​தமிழ்க் கவிமணி போன்ற பட்​டங்​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன. திரு​வள்​ளுவர் விருது, கலை​மாமணி விருது, சி.​பா.ஆ​தித்​த​னார் மூத்த தமிழறிஞர் விருது உள்​ளிட்ட பல்​வேறு விருதுகளை பெற்​றுள்​ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்​ துறை மரி​யாதை: முதல்​வர் ஸ்​டா​லின் உத்​தரவுப்​படி, காவல் துறை மரி​யாதை​யுடன் வா.​மு.சேது​ராமன் இறு​திச்​சடங்கு நேற்று சென்னை விரு​கம்​பாக்​கத்​தில் நடை​பெற்​றது. முன்​ன​தாக, பொது மக்​களின் அஞ்​சலிக்​காக விரு​கம்​பாக்​கம் சின்​மயா நகரில் உள்ள பெருங்​கவிக்கோ தமிழ்க்​கோட்​டம்
அலு​வல​கத்​தில் வைக்​கப்​பட்​டிருந்த வா.​மு.சேது​ராமன் உடலுக்கு முதல்​வர் ஸ்​டா​லின் அஞ்​சலி செலுத்​தி​னார்.

சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக்​குழு உறுப்​பினர் பால​கிருஷ்ணன், தென்​சென்னை மாவட்ட செய​லா​ளர் ஆர்​.வேல்​முரு​கன், தமிழக வாழ்​வுரிமை கட்​சித் தலை​வர் வேல்​முரு​கன், மதி​முக துணைப் பொதுச் செய​லா​ளர் மல்லை சத்யா உள்​ளிட்ட பல்​வேறு கட்சி தலை​வர்​களும் அஞ்​சலி செலுத்​தினர்.

தலை​வர்கள் இரங்​கல்: முதல்​வர் ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள சமூக வலை​தள பதி​வில்,‘பன்​னாட்​டுத் தமிழுறவு மன்ற நிறு​வனர் பெருங்​கவிக்கோ வா.​மு.சேது​ராமன் மறைந்த செய்​தி​அறிந்து சொல்​லொணாப் பெருந்​துயர் என்னை ஆட்​கொண்​டது. இன்​றுகூட முரசொலி​யில், ‘ஓரணி​யில் தமிழ்நாட்​டின் உரிமைநாட்​டு​வோம். தமிழர் ஒற்​றுமையாய் திரண்​டெழுந்தே வலிமைகாட்​டு​வோம்’ என கவிதை தீட்​டியிருந்த அவர் இப்​போது நம்மிடையே இல்லை என்​ப​தை சிந்தைஏற்க மறுக்​கிறது. அவரது பிரி​வால் வாடும் குடும்​பத்​தினர் உள்ளிட்ட அனைவருக்​கும் ஆழ்ந்த இரங்​கல்’ என்று தெரி​வித்​துள்​ளார்.

திரா​விடர் கழகத் தலை​வர் கி.வீரமணி: தமிழகத்​தில் மட்​டுமல்ல, உலகின் பல நாடு​களை​யும் சுற்றி தமிழ்த் தொண்​டாற்​றிய​வர்.

மதி​முக பொதுச்​ செய​லா​ளர் வைகோ: வா.​மு.சேது​ராமனின் பன்​னாட்டு தமிழுறவு மன்​றம் உலகம் தழு​விய அளவில் 7 மாநாடு​களை அயல்​நாடு​களில் நடத்​தி, உலகத் தமிழர் ஒற்​றுமையை வலுப்​படுத்​தி​யது.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: வாழ்​நாள் முழு​வதும் தமிழ் மொழி, தமிழர்​களின் வளர்ச்​சிக்​காக ஓய்​வறியா உழைப்பை வழங்​கிய​வர்.

பாமக தலை​வர் அன்​புமணி: அன்​னைத் தமிழுக்கு பணி செய்​வதையே வாழ்​நாள் கடமை​யாக கொண்​டிருந்த வா.​மு.சேது​ராமன், பாமக நிறு​வனர் ராம​தாஸ் மேற்​கொண்ட தமிழ் பாது​காப்பு பணி​களுக்கு துணை​யாக இருந்​தவர்.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: தமிழ் மொழி​யின் மேன்மை காக்க தமிழகம் முழு​வதும் நடைபயணம் மேற்​கொண்டு விழிப்​புணர்வை ஏற்​படுத்​தி​ய​வர்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் இரா.​முத்​தரசன்: தமிழ் இலக்​கி​யங்​களை உள்​வாங்​கி, வெளிப்​படுத்​தும் இவரது கவித்​து​வப் படைப்​பு​கள் என்​றென்​றும் அவரது ஆய்​வறிவை போற்றி நிற்​கும்.

மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம்: தமிழ் வளர்ச்​சிக்​காகவே த​னது வாழ்வை அர்ப்​பணித்​தவர் பெருங்​கவிக்கோ வா.​மு.சேது​ராமன்.

அமமுக பொதுச் ​செய​லா​ளர் டிடிவி தினகரன்: தமிழுணர்வை உலகம் முழு​வதும் பரப்ப பாடு​பட்ட செந்​தமிழ் கவிமணி வா.​மு.சேது​ராமனை இழந்​து​வாடும் குடும்​பத்​தினருக்​கு ஆழ்ந்​த இரங்​கல்​. இவ்​வாறு அவர்​கள்​ தெரிவித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x