Published : 06 Jul 2025 12:27 AM
Last Updated : 06 Jul 2025 12:27 AM
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமிக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மின்னஞ்சல் வழியே அவருக்கு கொலை மிரட்டல் வந்தது. சென்னை பசுமைவழி சாலை மற்றும் சேலத்தில் உள்ள அவரது வீடுகளுக்கு குண்டு மிரட்டலும் விடுக்கப்பட்டது.
இந்த சூழலில், 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தனது பிரச்சார சுற்றுப்பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் அவர் நாளை (ஜூலை 7) தொடங்க உள்ளார். அவர் செல்லும் இடங்களில் ஏராளமான மக்கள் கூடுவார்கள் என்பதால், அவரது பிரச்சார பயணத்துக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் இன்பதுரை ஆகியோர் டிஜிபியிடம் மனு கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், பழனிசாமிக்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கி, மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பழனிசாமி கூறும்போது, ‘‘இசட் பிளஸ் பாதுகாப்பு வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரிடம் நான் எதுவும் கேட்கவில்லை. ஏற்கெனவே எனது வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. அதனால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. எனக்கு ஏற்கெனவே ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இசட் பிளஸ் பாதுகாப்பாக உயர்த்தப்பட்டுள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT