Published : 06 Jul 2025 12:12 AM
Last Updated : 06 Jul 2025 12:12 AM

பாஜகவுக்கு தமிழகம் மறக்க முடியாத பாடத்தை மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் ஸ்டாலின் கருத்து

சென்னை: தமிழுக்கும், தமிழகத்துக்கும் செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேடாவிட்டால், தமிழகம் மறக்க முடியாத பாடத்தை மீண்டும் கற்பிக்கும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்தி திணிப்பை முறியடிக்க திமுகவும், தமிழக மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமை போர், மாநில எல்லைகளைக் கடந்து தற்போது மராட்டியத்தில் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகப் பள்ளிகளில் 3-வது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதி ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி 2-ம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள். இந்தி திணிப்புக்கு எதிராக சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.

உத்தரப்பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன, இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன, இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள் என்று ராஜ் தாக்கரே எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற மத்திய அரசிடம் எந்த பதிலும் இருக்காது.

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி-சம்ஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழகத்தைப் பழிவாங்கும் போக்கை மத்திய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழகப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா? இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழக மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது. இந்தி திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளா மலும், `இந்தி படித்தால் வேலைகிடைக்கும்' என்ற வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப் போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள சிலர், இனியாவது திருந்த வேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்.

தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவத்தை நீடிக்கவிட மாட்டோம். தமிழுக்கும், தமிழகத்துக்கும் பாஜகசெய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும், அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழகம் மறக்க முடியாத பாடத்தை மீண்டும் கற்பிக்கும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x