“அதிமுகவை தோழமைக் கட்சியாக விஜய் பார்க்கிறாரா?” - திருமாவளவன் 

“அதிமுகவை தோழமைக் கட்சியாக விஜய் பார்க்கிறாரா?” - திருமாவளவன் 
Updated on
1 min read

திருச்சி: “தவெக செயற்குழு கூட்டத்தில் அதிமுக பற்றி விஜய் எதுவும் சொல்லவில்லை. அதிமுகவை தோழமைக் கட்சியாக பார்க்கிறாரா?” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருச்சியின் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுக முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்பதை தேசிய அளவிலான பார்வையுடன் கூடிய கருத்தாக பார்க்கிறேன். தமிழகத்தில் சங்பரிவார் அரசியல் எந்த வகையிலும் நுழையாமல் தடுக்க அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் ஓர் அணியில் திரள வேண்டும்.

பாமக விவகாரத்தில் தந்தையும், மகனும் ஒன்று சேருவார்கள் என நான் நம்புகிறேன். ஒரே பாமகவாகத்தான் தேர்தலை சந்திப்பார்கள். நடிகர் விஜய்க்கு மத்திய அரசு ஏற்கெனவே ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. தற்போது தாமதமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி உள்ளது. இருந்தாலும் இதை விசிக வரவேற்கிறது.

அதிமுக கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக தான். ஆனாலும், தேர்தலுக்குப் பின்பு தான் முதல்வரை தேர்ந்தெடுப்போம் என்று சொல்லக்கூடிய நிலை இருக்கிறது என்றால், அதற்கு பழனிசாமிதான் கருத்து சொல்ல வேண்டும். திமுக, பாஜகவை கொள்கை எதிரி என கூறிய தவெக தலைவர் நடிகர் விஜய், அதிமுக பற்றி எதுவும் சொல்லவில்லை. அப்படியென்றால் அதிமுகவை தோழமைக் கட்சியாக பார்க்கிறாரா என அவர்தான் கூற வேண்டும்” என்று திருமாவளவன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in